சென்னை: சென்னையில் ஓடும் ரயிலில் இருந்து கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில், பெற்றோர் எதிர்ப்பால் சதீஷுடன் பேசுவதை சத்யபிரியா நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதி, கல்லூரிக்கு செல்வதற்காக, பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, ரயில் முன் தள்ளிவிட்டு சதீஷ் கொலை செய்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய நிலையில் கைது செய்யப்பட்ட சதீஷ், இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி காவல்துறை தரப்பில் 70 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதில்; பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் சதீஷ் என்பவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாணவியை பின்தொடர்ந்து தொல்லை அளித்த பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் உறுதி செய்த பின் தண்டனையை நிறைவேற்ற வேண்டும். 3 ஆண்டுகள் தண்டனை நிறைவு செய்த பின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற அல்லிகுளம் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
The post ரயில் முன் தள்ளி மாணவி கொலை; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை: அல்லிகுளம் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.