பஞ்சாப்பில் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம்.. 200க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல்; 150க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து!!

சண்டிகர் : ஒன்றிய அரசை கண்டித்து பஞ்சாப்பில் விவசாயிகள் நடத்தும் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் தொடங்கி உள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வமான உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து பஞ்சாப் விவசாயிகள் போராடி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா மாநில எல்லையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இந்த மாதம் 6,8 ஆகிய தினங்களில் டெல்லியை நோக்கி பேரணி செல்ல முயன்ற போது , அவர்கள் மீது காவல்துறை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்களின் பேரணி கைவிடப்பட்டது. மறுபுறத்தில் ஒன்றிய அரசை கண்டித்து விவசாய சங்க தலைவர் தல்லேவால் 35வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதால் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது.

இந்த சூழலில் இன்று பஞ்சாப்பில் முழு அடைப்பை போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 200க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் பந்த் போராட்டத்தை முன்னிட்டு 150-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஆங்காங்கே ட்ராக்டர் பேரணிகளையும் விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர். போராட்டத்திற்கு ஆதரவாக அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முழு அடைப்பு குறித்து பேசிய விவசாயத் தலைவர் சர்வான் சிங் பாந்தர்,’ விமான சேவை, மருத்துவத் தேவைகள், திருமணம் அல்லது வேலை நேர்காணல் தொடர்பான பயணம் உள்ளிட்ட அவசரச் தேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாது, ” என உறுதி அளித்துள்ளார்.

The post பஞ்சாப்பில் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம்.. 200க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல்; 150க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து!! appeared first on Dinakaran.

Related Stories: