சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 1363 பேருந்து நிறுத்தங்களில் 2ம் கட்டமாக இன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரத் தூய்மைப் பணிகளில் 38.86 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு, பேருந்து நிறுத்தங்கள் சுத்தம் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, நாள்தோறும் சராசரியாக 5,900 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது.
தீவிரத் தூய்மைப் பணியின் கீழ், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள், கட்டடக் கழிவுகள், சாலையோரங்கள் மற்றும் சாலை மையத்தடுப்புகளில் உள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றுதல், நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள், பூங்காக்களில் தூய்மைப் பணிகள், விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுதல், பெருமளவு குப்பை சேகரமாகும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து, அவ்விடங்களில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளுதல், சேதமடைந்த குப்பைத் தொட்டிகளுக்கு மாற்றாக புதிய குப்பைத் தொட்டிகள் வைத்தல் உள்ளிட்ட தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் மக்களின் சுகாதாரத்தைப் பேணுகின்ற வகையிலும், தூய்மையான நகரமாக விளங்குகின்ற வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் அமைக்கப்பட்ட அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் கடந்த 21.08.2024 அன்று முதற்கட்டமாக தீவிரத் தூய்மைப் பணிகள் (Mass cleaning) மேற்கொள்ளப்பட்டு, குப்பைகள், கட்டடக் கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பதாகைகள் அகற்றுதல், பயணியர் இருக்கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள 1363 பேருந்து நிறுத்தங்களிலும், இன்று காலை 6 மணி முதல் 8.00 மணி வரை ஒரேநேரத்தில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணிகளில் குப்பைகள் மற்றும் கட்டடக் கழிவுகளை அகற்றுதல், சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றுதல், இருக்கைகள் மற்றும் பேருந்து நிறுத்தத்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தை சுத்தம் செய்து, பேருந்து நிழற்குடைகள் முழுவதையும் தண்ணீர் பயன்படுத்தி சுத்தம் செய்தல், நிழற்குடைகளில் உள்ள பழுதுகளை அடையாளம் கண்டு, அவற்றின் அளவீடுகளை கணக்கெடுத்து மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 1,363 பேருந்து நிறுத்தங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிரத் தூய்மைப் பணிகளில் 21.85 மெட்ரிக் டன் குப்பைகள், 17.02 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள், 3,954 சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட 120 பேனர்கள் அகற்றப்பட்டு, 5,543 பேருந்து நிழற்குடை இருக்கைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பேருந்து நிறுத்த நிழற்குடைகளில் 180 சிறு, சிறு பழுதுகள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பழுதுகளை சரிசெய்வதற்கான மதிப்பீடுகள் தயார்செய்யப்பட்டு விரைவில் சீரமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னையில் 1363 பேருந்து நிறுத்தங்களில் தீவிர தூய்மை பணி: 38.86 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம் appeared first on Dinakaran.