இந்தியாவிலேயே முதல்முறையாக கன்னியாகுமரி கடலில் கண்ணாடி பாலம்: திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறையை இணைக்கிறது; முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

நாகர்கோவில்: கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25வது ஆண்டு வெள்ளிவிழாவையொட்டி, இந்தியாவிலேயே முதன் முறையாக திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் பாறை இடையே கடல் நடுவே ₹37 கோடியில் கட்டப்பட்ட கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சூழும் பகுதியில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு, 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அப்போதைய முதல்வர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது. இதன் 25ம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாட்டம், தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று தொடங்கியது. இந்த விழாவில் பங்கேற்க தூத்துக்குடியில் இருந்து நேற்று மதியம் கார் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின், குமரி மாவட்டம் வந்தார். அவரை கன்னியாகுமரி அருகே மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் பொதுமக்கள் திரண்டு உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

கன்னியாகுமரியில் படகுத்துறைக்கு மாலை 4.50க்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் ‘விவேகானந்தா’ படகு மூலம் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கு சென்றார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, நேரு, எ.வ.வேலு, பொன்முடி, தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி ராஜா, சேகர்பாபு, சாமிநாதன், ராஜேந்திரன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி, முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலின் ஆகியோரும் உடன் சென்றனர். திருவள்ளுவர் சிலைக்கு சென்றதும் முதல்வரை அமைச்சர் எ.வ.வேலு சால்வை அணிவித்தும், புத்தகம் வழங்கியும் வரவேற்றார்.

அங்கு திருவள்ளுவர் சிலை அடிப்பகுதியில் ‘பேரறிவு சிலை’ நினைவு சின்னத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். அந்த நினைவு சின்னம் முன்பு துணைவியார் துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்களுடன் குழுவாகவும், தனியாகவும் முதல்வர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் இந்தியாவிலேயே முதல்முறையாக ₹37 கோடியில் கடல் மீது கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து கண்ணாடி பாலம் மீது கடல் அழகை ரசித்த வண்ணம் நடந்து சென்றார்.

பின்னர் திருவள்ளுவர் சிலையின் மேல் தளம் சென்று, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து திருவள்ளுவர் சிலையை சிறிது நேரம் ரசித்தார். பின்னர் திருக்குறள் நெறிபரப்பும் 22 தகைமையாளர்களுக்கு ₹25 ஆயிரம் பரிசு, சான்றிதழ் வழங்கினார். அங்கிருந்து படகில் கரை திரும்பி வந்து படகுத்துறையில் திருவள்ளுவர் மணல் சிற்பத்தை பார்வையிட்டு ரசித்தார்.

பின்னர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள லேசர் ஒளி வண்ண விளக்குகளில் திருவள்ளுவர் சிலை ஒளிர்வதையும், அதனையொட்டியுள்ள காட்சிகளையும் பார்வையிட்டார். அங்கிருந்து விழா பந்தலுக்கு புறப்பட்டார். அங்கு ‘திருக்குறளால் அதிக நன்மை தனி மனிதருக்கே, சமுதாயத்திற்கே’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. சுகி சிவம் நடுவராக இருந்தார். தனி மனிதருக்கே என்ற தலைப்பில் ராஜாராம், மோகனசுந்தரம், மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோரும், சமுதாயத்திற்கே என்ற தலைப்பில் புலவர் சண்முக வடிவேல், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, ராஜா ஆகியோரும் பேசினர். பட்டிமன்றத்தை ரசித்து கேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னர் அரசு விருந்தினர் மாளிகை திரும்பினார்.

வெள்ளி விழா மலரை வெளியிடுகிறார்
2ம் நாள் நிகழ்ச்சிகளாக இன்று காலை 9.30 மணிக்கு திருவள்ளுவர் வெள்ளிவிழா பொதுக்கூட்டம் நடக்கிறது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேருரை நிகழ்த்துகிறார். விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பேசுகிறார்கள். தலைமை செயலாளர் முருகானந்தம் வரவேற்கிறார். கலெக்டர் அழகுமீனா நன்றி கூறுகிறார். திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மலரையும் முதல்வர் வெளியிடுகிறார்.

The post இந்தியாவிலேயே முதல்முறையாக கன்னியாகுமரி கடலில் கண்ணாடி பாலம்: திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறையை இணைக்கிறது; முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: