சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 10-11% வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலீட்டாளர்களின் ரூ.525 கோடி மோசடி செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரால், அந்த நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ள சிவகங்கை பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் எழுந்தது.
இதையடுத்து இன்று தேவநாதனை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டையில் பதுங்கி இருந்த தேவநாதனை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தேவநாதனை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது; “இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர், தேவநாதன் தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன்.
மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, முதலீட்டாளர்கள் அனைவருக்கும் இதனை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
The post மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை appeared first on Dinakaran.