சேலம்: சேலம் மேற்கு தொகுதி ராமதாஸ் ஆதரவு பாமக எம்எல்ஏ அருள், நேற்று அளித்த பேட்டி: தேர்தல் ஆணையத்தில் அன்புமணி தரப்பில் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் எல்லாம் பொய். நாங்கள் உரிய ஆவணங்கள் கொடுக்கிறோம். கத்துகிறோம், கதறுகிறோம். ராமதாஸ் தான் தலைவர், நாங்கள் தான் உண்மையான பாமக என்று சொல்லி, பல ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் வழங்கினோம். எதையும் பரிசோதிக்கவில்லை. ஆனால் தேர்தல் ஆணையம், 2 பேருக்கு சின்னத்தை கொடுக்கமாட்ேடாம் என்று தெளிவாக சொல்லி இருக்கிறது.
தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல்களை யார் கொடுத்தாலும், அவர்கள் மீது சிபிஐ முழுமையான நீதி விசாரணை நடத்த வேண்டும். சிவில் நீதிமன்றத்திற்கு அன்புமணி தான் போக வேண்டும். நாங்கள் போக வேண்டிய அவசியமில்லை. பாமகவுக்கும், அன்புமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கி விட்டார். அன்புமணிக்கும் பாமகவுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. பாமக யாருடன் கூட்டணி என்பது குறித்து, ராமதாஸ் தான் பேசுவார்.
பாமகவுடன் கூட்டணி என்று, வேறு யாரிடமும் பேசி ஏமாந்து விட வேண்டாம். ராமதாஸ் 10 சதவீதம் ஒட்டுக்கு சொந்தக்காரர். எனவே, கூட்டணி பற்றி பேசவேண்டும் என்றால் ராமதாசிடம் வாருங்கள். இந்த முறையும் தைலாபுரம் தோட்டத்தில் தான் கூட்டணி முடிவாகும். பிரிந்து போனவர்கள் தைலாபுரம் ேதாட்டத்திற்கு வாருங்கள்.
இவ்வாறு அருள் கூறினார்.
