சென்னை: திருத்தணி முருகன் கோயிலுக்கு நேற்று காலை 10.40 மணிக்கு வந்த மாநில பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விஐபி தரிசன வழியில் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் அரை மணி நேரம் கோயிலில் மூலவர், வள்ளி தெய்வானை மற்றும் உற்சவர், சண்முகர் ஆகிய தெய்வங்களை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மலர் மாலை அணிவிக்கப்பட்டு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து கோயில் விஐபி கேட் நுழைவாயிலில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றினால் மத கலவரம் ஏற்படும் என்று திமுக தான் கூறுகிறது. அங்கு கலவரம் நடக்க எந்த முகாந்திரமும் இல்லை. திருப்பரங்குன்றத்தை பொறுத்தவரை நிலுவையில் இருந்த வழக்கு தீர்ப்பின்படி மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவை அரசு பின்பற்ற வேண்டும், உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட எந்த அமைப்பும் தீபம் ஏற்றுவதை எதிர்க்கவில்லை. பாஜ கூட்டணியை பொறுத்தவரை தேர்தல் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது. கோயில்களை பொறுத்தவரை முக்கிய பிரமுகர்களுக்கு முன்னுரிமை வழங்கி தரிசனம் வசதி ஏற்படுத்தி தருவது இயல்புதான் என்றாலும் சாமானிய பக்தர்களுக்கு பாதிப்பின்றி விஐபிகள் தரிசனம் வசதி செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
