2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓர் அடித்தளமாக மண்டல அளவில் பிரமாண்ட இளைஞர் அணியினர் சந்திப்பு

 

* திருவண்ணாமலையில் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு
* முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்

சென்னை: சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓர் அடித்தளமாக அமையும் வகையில் மண்டல அளவில் பிரமாண்ட இளைஞர் அணியினர் சந்திப்பை உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார். திருவண்ணாமலையில் நடக்கும் இந்த சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன.

தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். காஞ்சிபுரத்தில் அண்ணாவின் இல்லத்தில் அவரை வணங்கி தனது தேர்தல் பயணத்தை தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து மாநில அளவில் திமுகவின் கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக மாவட்டம் தோறும் உதயநிதி ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு
வருகிறார்.

அப்போது திமுகவின் அனைத்து மாவட்டத்தின் நிலையில் உள்ள நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். அனைவரின் கருத்துகளையும் கேட்டு வருகிறார். நிர்வாகிகள் தங்களது கருத்துகள், கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை விரிவாகப் பகிர்ந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கருத்து பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் நிர்வாகிகள் தங்களுக்கு கருத்துகளை எழுதி போட்டு வருகின்றனர். இதில் உள்ள கருத்துகளை உதயநிதி ஸ்டாலின் தாமாகவே படித்து, அதை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக கொண்டு சென்று வருகிறார்.

இந்நிலையில் 2026 சட்­டமன்­றத் தேர்­தலுக்கு ஓர் அடித்­தள­மாக மண்டல அளவிலான இளைஞர் அணி சந்திப்புக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார். இதன் ஒரு பகுதியாக வருகிற 14ம் தேதி திருவண்ணாமலையில் மண்டல அளவிலான இளைஞர் அணியினர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வடக்கு மண்­டலத்துக்கு உட்பட்ட கிட்­டத்­தட்ட ஒரு லட்­சத்து 25 ஆயி­ரம் இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

இதில் திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். அப்போது சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடுவார் என்று தெரிகிறது. இதனால், திமுக மண்டல நிர்வாகிகள் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories: