ஆளுநரிடம் மாணவி பட்டம் பெற மறுத்த விவகாரம் பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து

 

மதுரை: ஆளுநரிடம் இருந்து பெற மறுத்ததால், மாணவியின் பட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில், நெறிமுறைகளை உருவாக்க ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா கடந்த 13.8.2025 அன்று நடந்தது. விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடமிருந்து பட்டத்தை பெற ஒரு மாணவி மறுத்து, துணைவேந்தரிடம் பெற்றுக் கொண்டார். பல்கலை. சட்டப்படி வேந்தரே பல்கலை தலைவர். அவர் இல்லாதபோது மட்டுமே, துணைவேந்தர் பட்டத்தை வழங்க முடியும். எனவே, வேந்தரிடம் பட்டம் பெற மறுத்தது சட்ட மீறல். எனவே, துணைவேந்தரிடம் இருந்து மாணவி பெற்ற பட்டத்தை, ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பதற்காக, நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பல்கலை பட்டமளிப்பு விழாவில், கவர்னரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் மாண்பை காக்க வேண்டும். இளைய தலைமுறைகளுக்கு உரிய வழிகாட்ட வேண்டும் என தெரிவித்தனர்.
பின்னர் இந்த மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பதை முடிவு செய்வதற்காக டிச.18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: