காரப்பாக்கம் ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியியல் புத்துயிர் மாநாடு

காஞ்சிபுரம்: காரப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியியல் புத்துயிர் அளித்தல் தொடர்பான மாநாடு நடந்தது. இதில், பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக கல்வி நுட்பவியல் துறை மற்றும் காஞ்சிபுரம் சோழன் கல்வியியல் கல்லூரி இணைந்து நடத்தும் உயர்கல்வியில் பல்துறைக்கு புத்துயிர் அளித்தல், தொழில்நுட்பம் 4.0 என்ற தலைப்பில் இரு நாட்கள் சர்வதேச மாநாடு காரப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தகவல் ஆணையர் செல்வராஜ் தலைமை தாங்கி, பன்னாட்டு கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளின் நூல் வடிவை வெளியிட்டு பேசினார். சிறப்பு அழைப்பாளராக சவுதி அரேபியா ஜாசன் பல்கலைக்கழக இணை பேராசிரியர் ஏ.கே.கருணாமூர்த்தி கலந்துகொண்டு,‘‘இரண்டாம் நிலை தரவுகளை தொகுத்து முறையான மறு ஆய்வு கட்டுரையை சுருக்கமாகவும், துல்லியமாகவும் அறிக்கையிடுவதற்கான அறிவியல் வழிகாட்டி’’ என்று பேசினார்.

முன்னதாக, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக சிண்டிகேட் துணை குழு உறுப்பினர் பி.நடேசன், காஞ்சிபுரம் சோழன் கல்விக்குழும தாளாளர் தொ.சஞ்சீவி ஜெயராம் தலைமையில் நடந்த கருத்தரங்கை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக கல்வி நுட்பவியல் துறைத் தலைவர் எம்.கண்மணி, சோழன் கல்வியியல் கல்லூரி முதல்வர் நெ.அன்பு ஒருங்கிணைந்து நடத்தினர்.

2 நாள் நடந்த மாநாட்டில் 170க்கும் மேற்பட்டோர் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். நிறைவு விழாவில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் எம்.செந்தில்குமரன் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்வில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகப் பதிவாளர் என்.ராமகிருஷ்ணன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பி.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post காரப்பாக்கம் ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியியல் புத்துயிர் மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: