இலங்கையை மையமாக வைத்து பல்வேறு அரசியல் நகர்வுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இந்தியா, சீனாவின் ஆதரவு எப்படி இருக்கும் என்பது விவாதிக்கப்பட்டும் வருகிறது. மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவும் அவரது ஒட்டுமொத்த குடும்பமுமே சீனாவை முழுமையாக நம்பக்கூடியது; இந்தியாவை மிக கடுமையாக எதிர்க்க கூடியது. ரணில் மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரில் ஒருவரைத்தான் இந்தியா ஆதரிக்கவும் வாய்ப்பிருக்கிறது எனவும் இலங்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஈழத் தமிழர்கள் செலுத்தும் வாக்கு வெற்றியை தீர்மானிக்க கூடியதாக இருந்து வந்தது.
தற்போது யுத்தம் முடிவடைந்து ஈழத் தமிழருக்கான பிரதிநிதித்துவ தலைமை இல்லாத நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்து ஒரு பொதுவேட்பாளரை நிறுத்த திட்டமிட்டன. இந்நிலையில் முன்னாள் எம்பி அரியநேந்திரனை ஈழத் தமிழ் அரசியல் கட்சிகள் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் கூட்டத்தின் பின்னர் பொது வேட்பாளராக அவரது பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் நா.சிறிகாந்தா, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சிவநாதன் வேந்தன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உள்ளிட்ட சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். 7 தமிழ் கட்சிகளும் 7 குடிமை அமைப்புகளும் இணைந்து தமிழ் தேசிய பொது கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post இலங்கை ஜனாதிபதி தேர்தல்.. ஈழத்தமிழர்களின் பொது வேட்பாளர் அரியநேந்திரன் அறிவிப்பு!! appeared first on Dinakaran.