பெர்லின்: உண்மையை விட ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அதிகாரம் தான் முக்கியம். ஆனால் உண்மையை பின்பற்றுவதே காங்கிரசின் கடமை என்று ஜெர்மனியில் ராகுல்காந்தி பேசினார்.ஜெர்மனி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஜெர்மானிய சிந்தனைக் குழுக்களுடன் கலந்துரையாடி, வேகமாக மாறிவரும் உலகச் சூழலில் இந்தியாவின் பயணம் குறித்துப் பேசினார். மேலும் அவர் பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியிலும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்து இருந்த கூட்டத்திலும் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: ஜனநாயகம் என்பது வெறும் அரசாங்க அமைப்பு மட்டுமல்ல. அது தொடர்ச்சியான ஈடுபாடு, பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் ஒரு செயல்முறையாகும். அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமமான கல்வி மிகவும் முக்கியம். ஆழமான கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளைக் கையாள்வதற்கு வலுவான உலகளாவிய ஒத்துழைப்பின் அவசியம். காங்கிரஸ் கட்சி உண்மைக்காக நிற்கிறது. இந்தியாவின் உண்மையை பாதுகாக்கிறது. நமது முழு கலாச்சாரமும் உண்மையை அடிப்படையாகக் கொண்டது.
நீங்கள் எந்த மதத்தைப் பார்த்தாலும், சாராம்சத்தில் அவை ‘உண்மையைப் பின்பற்றுங்கள்’ என்றுதான் கூறுகின்றன. காங்கிரஸ், மகாத்மா காந்தி மற்றும் நீங்களும் கூட அதைத்தான் கூறுகிறீர்கள். எனவே நாம் இந்தியாவின் உண்மையை பாதுகாக்கிறோம். உண்மையை பின்பற்றுவதே காங்கிரசின் கடமை. ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தத் தலைவர், உண்மைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, அதிகாரம்தான் முக்கியம் என்று வெளிப்படையாகக் கூறுகிறார். இதுதான் அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். ஜெர்மனியில் உள்ள இந்திய சமூகத்தினர் நாட்டிற்கு சிறந்த தூதுவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் இந்தியாவின் கருத்தை, இந்தியாவின் உண்மையை சுமந்து செல்கிறீர்கள். உங்கள் அனைவரையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.இவ்வாறு பேசினார். அதை தொடர்ந்து ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஓலாப் ஷோல்ஸுடன் மதிய உணவு கலந்துரையாடலிலும் ராகுல்காந்தி பங்கேற்றார். பின்னர் ஜெர்மனியின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை பாதுகாப்புத் துறை அமைச்சர் கார்ஸ்டன் ஷ்னைடருடனும் ஆலோசனை மேற்கொண்டார்.
