துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது. பலத்த காற்று வீசியது. இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வான்வழி மற்றும் சாலைப் போக்குவரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து எமிரேட்ஸ், பிளை துபாய் உள்ளிட்ட நிறுவனங்கள் பல விமானங்களை ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் ஆயிரக்கணக்கில் தவித்தனர். பலத்த காற்று, குறைந்த பார்வைத்திறன் மற்றும் மழை காரணமாக விமானங்கள் பாதுகாப்பாக புறப்படுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. துபாயின் பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து மெதுவாக நகர்ந்தது.
இதுதொடர்பாக துபாய் காவல்துறை தொடர்ந்து எச்சரிக்கைகள் வெளியிட்டது. ஷார்ஜாவிலும் நிலைமை சீராக இல்லை. துபாயையும் ஷார்ஜாவையும் இணைக்கும் எமிரேட்ஸ் சாலை, அல் இத்திஹாத் சாலை போன்ற முக்கிய நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தேங்கி, சில இடங்களில் சிறு விபத்துகளும் ஏற்பட்டன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, வழக்கமான பயண நேரம் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை நீடித்தது. அல் தாவூன் தெரு உள்ளிட்ட உள்சாலைகளிலும் வெள்ளம் புகுந்ததால் மக்கள் மாற்று வழிகளை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
