பதவியேற்ற ஓராண்டில் 8 போர்களுக்கு முடிவு; அமெரிக்காவின் வலிமையை மீட்டெடுத்தேன்: சாதனைகளை பட்டியலிட்ட அதிபர் டிரம்ப்

நியூயார்க்: அமெரிக்காவின் வலிமையை மீட்டெடுத்தது, 10 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியது என தனது ஓரு ஆண்டு கால பதவியின் சாதனைகளை அதிபர் டிரம்ப் பட்டியலிட்டார். அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்றார். இந்நிலையில் ஆண்டிறுதியையொட்டி அவர் நாட்டுமக்களுக்கு நேற்று முன்தினம் உரையாற்றினார். சுமார் 19 நிமிடங்கள் உரையாற்றிய அதிபர் டிரம்ப், இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து தனது நிர்வாகத்தின் பணிகளையும், வெற்றிகளையும், சாதனைகளையும் பட்டியலிட்டார்.

அதிபர் டிரம்ப் பேசுகையில், ‘‘பதினோரு மாதங்களுக்கு முன்பு நான் ஒரு குழப்பமான சூழ்நிலையைத்தான் பெற்றேன். அதை நான் சரி செய்து வருகின்றேன். நான் அமெரிக்காவின் வலிமைையை மீட்டெடுத்துள்ளேன். 10 மாதங்களில் எட்டுப்போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை அழித்துள்ளேன். காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வந்து 3000 ஆண்டுகளில் முதல் முறையாக மத்திய கிழக்கில் அமைதியை கொண்டுவந்துள்ளேன். இறந்தவர்கள் மற்றும் உயிருடன் இருப்பவர்கள் உட்பட பிணை கைதிகளை விடுவித்துள்ளேன். உலகம் முழுவதிலும் இருந்து நாட்டிற்குள் வரும் புலம்பெயர்ந்தோர் அமெரிக்க வேலைகளை பறித்துக்கொள்வது மற்றும் வீட்டு வாடகை கட்டணங்களை அதிகரிப்பது போன்ற பிரச்னைகளை அரசு திறமையாக கையாண்டு வெற்றி பெற்றுள்ளது.

முன்னாள் அதிபர் பைடன் நிர்வாகமும் அதன் கூட்டாளிகளும் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தவர்களை நாட்டிற்குள் கொண்டு வந்து வரி செலுத்துவோர், நிதியுதவி பெறுவோரின் வீடுகளை அவர்களுக்கு வழங்கினார்கள். அதே நேரத்தில் அமெரிக்கர்களுக்கு வாடகை மற்றும் வீட்டுச்செலவுகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இப்போது 50 ஆண்டுகளில் முதல் முறையாக புலம்பெயர்ந்தோர் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்புவதால் அமெரிக்கர்களுக்கு அதிக வீடுகளும், அதிக வேலைகளும் கிடைக்கின்றன. நான் பதவியேற்றதில் இருந்து உருவாக்கப்பட்ட அனைத்து நிகர வேலைகளிலும் 100 சதவீதம் அமெரிக்காவில் பிறந்த குடிமக்களுக்கே கிடைத்துள்ளது. அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பல ஆண்டுகளுக்கு முன் கைப்பற்றப்பட்ட சொத்துக்களை வெனிசுலா திருப்பி தர வேண்டும்” என்றார்.

வீரர்களுக்கு போனஸ்: அதிபர் டிரம்ப் தனது உரையில் பொருளாதாரம் வலுவாக உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமெரிக்க படைகளுக்கு 1776டாலர் போனஸ் காசோலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். தைவானுக்கு ஆயுத விற்பனை: அமெரிக்க வெளியுறவு துறை, தைவானுக்கு 10பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள பிரம்மாண்டமான ஆயுத விற்பனை தொகுப்பை அறிவித்துள்ளது. இதில் நடுத்தர ஏவுகணைகள், ஹோவிட்சர்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

இந்தியா சாத்தியமான கூட்டாளி
அமெரிக்காவின் பொருளாதார விவகாரங்களுக்கான துணை வெளியுறவுச் செயலர் ஜேக்கப் ஹெல்பெர்க் கூறுகையில்,‘‘பாக்ஸ் சிலிக்காவில் இந்தியா சேர்க்கப்படாததற்கும், இந்தியா அமெரிக்கா உடனான பதற்றங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. விநியோக சங்கிலி பாதுகாப்பு தொடர்பான முயற்சிகளில் இந்தியாவை மிகவும் மூலோபாய சாத்தியமான கூட்டாளியாக நாங்கள் கருதுகிறோம். அவர்களுடன் சேர்ந்து ஈடுபடுவதற்கான வாய்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். பிப்ரவரியில் நடைபெற உள்ள ஏஐ உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும்போது நேரில் சந்தித்து சில உறுதியான விவகாரங்களை தீர்மானிக்க உள்ளோம்” என்றார்.

போதைப்பொருள் படகு மீது தாக்குதல்
கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தியதாக படகின் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுடன் சேர்ந்து கடத்தலில் ஈடுபட்டதாக இதுவரை 26 படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவங்களில் சுமார் 99 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Related Stories: