நலத்திட்ட உதவிகளுக்கு வேளாண் திட்டத்தில் பதிவு செய்யலாம்

சிவகங்கை, ஆக.5: சிவகங்கையில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகள் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம சார்பில் தெரிவித்துள்ளதாவது:வேளாண் அடுக்ககம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் தங்களது விபரங்களை கிரெய்ன்ஸ் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேளாண் அடுக்ககம் திட்டத்தின் மூலம் அனைத்து சாகுபடி நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் விபரம், நில உடமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல் மற்றும் பயிர் சாகுபடி விபரம் ஆகிய அடிப்படை விபரங்களைக் கொண்டு கிரெய்ன்ஸ் என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் வருவாய், வேளாண் துறை, பேரிடர் மேலாண்மை, கூட்டுறவு, பட்டு வளர்ச்சி, உணவு வழங்கல், கால்நடை பராமரிப்பு உட்பட 13 துறைகள் இணைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதி செய்ய முடியும். ஒற்றை சாளர இணையதளமாக செயல்படுவதால் ஒரே இடத்தில் பதிவு செய்வதன் மூலம் அனைத்து துறைகளிலும் விவசாயிகள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொள்ளமுடியும்.

இதுவரை பெற்ற நலத்திட்ட உதவிகளை நேரடியாக தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு முறை பயன்பெற விண்ணப்பிக்கும் போதும் விவசாயிகள் ஆவணங்களை சமர்பிக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, விவசாயிகள் தங்களது ஆதார் கார்டு நகல், புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் நிலப்பட்டா ஆவண நகல் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட விஏஓ அல்லது உதவி வேளாண்மை அலுவலர் அல்லது உதவி தோட்டக்கலை அலுவலரிடம் ஒப்படைத்து இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நலத்திட்ட உதவிகளுக்கு வேளாண் திட்டத்தில் பதிவு செய்யலாம் appeared first on Dinakaran.

Related Stories: