விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் 863 இடங்களில் சிலைகள் இன்று பிரதிஷ்டை: எஸ்பி தலையில் பாதுகாப்பு பணியில் 900 போலீசார்

தேனி, செப். 7: தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி 863 சிலைகளை பக்தர்கள் இன்று பிரதிஷ்டை செய்து பூஜை நடத்துகின்றனர். இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா இன்று (7ம்தேதி) கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பக்தர்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதேபோல, இந்து அமைப்பினர் மாவட்டம் முழுவதும் பொதுஇடங்களிலும், தனியாருக்கு சொந்தமான இடங்களிலும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, பூஜை செய்து வழிபாடு நடத்திய பின்னர், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன்படி, கடந்த காலங்களில் தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, வருசநாடு, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் என 14 இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வந்துள்ளது. இதன்படி, இவ்வாண்டு தேனி மாவட்டத்தில் 14 இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலங்களை நடத்தி விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

மேலும், தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டைப்போல 863 விநாயகர் சிலைகளை வைத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை வைக்க தேனி மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, தேனி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் அமைப்பதற்கு வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி சான்று, சிலை வைக்கப்படும் இடத்தினரிடம் தடையில்லா சான்று, ஒலி பெருக்கி அமைப்பது தொடர்பாக தடையில்லாச் சான்று, தற்காலிக அமைப்புகள், தீணணைப்புத் துறையின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுதற்கான தடையில்லா சான்று, சட்ட விரோத மின்இணைப்பு இருக்கக் கூடாது என்பதற்காக மின்சாரம் பெறப்படும் முறை குறித்து மின்சார வாரியத்திடம் தடையில்லாச் சான்று போன்ற பல்வேறு தடையின்மை சான்றுகளை பெற வேண்டும். பீடம் மற்றும் சிலையுடன் மொத்த உயரம் 10 அடிக்கு மேலாக இருக்கக் கூடாது. பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகள் அமைக்கக் கூடாது. களிமண்ணால் மட்டுமே சிலைகள் செய்யப்பட வேண்டும்.

சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் காலையில் 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் மட்டுமே ஒலிபெருக்கிகளை பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலைகள் வைத்து வழிபடும் இடங்களில் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். சிலை அமையும் இடத்தில் அரசியல் கட்சியினரின் பெயர்பலகைகள் வைக்கக் கூடாது. சிலை வைத்திருக்கும்போது எந்த அமைப்பின் மூலம் வைக்கப்படுகிறதோ அந்த அமைப்பினை சேர்ந்த இரண்டு நபர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். பிற மத வழிபாட்டுத் தலங்களில் வழியே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்லக்கூடாது. காவல்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ளாட்சித் துறை ஆகிய துறைகளால் அனுமதிக்கப்படும் இடங்களில் மட்டும் சிலைகள் வைக்கப்பட வேண்டும். சிலைகள் அமைக்கப்பட்டு மூன்று நாட்களுக்குள் கரைக்கப்பட வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தின்படி, வாகனங்களில் உரிய எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே ஊர்வலத்தில் செல்ல வேண்டும். விநாயகர் சதுர்த்தி திருவிழா நிறைவு ஊர்வலத்தில் வாகனங்களில் சிலை வைத்து செல்லும்போது பலகை அமைத்து அதன்மேல் சிலை வைக்காமல் வண்டியனி தரை மட்டத்தில் மட்டுமே வைக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.இதுகுறித்து இந்து அமைப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்திலும் நடத்தப்பட்டன. மேலும், அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சிலைகளை வைக்க ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களுக்கு விநாயகர் சிலைகள் வாகனங்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்பட்டன. சிலைகள் வைக்கப்பட்ட பகுதிகளில் சிறிய பந்தல் அமைத்தும், வாழைமரங்களை கட்டியும், ஒலி பெருக்கி அமைத்தும் விழாவை தொடங்கினர். விநாயகர் சதுர்த்தி தினமான இன்று காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் விநாயகர் சிலைகளின் கண்கள் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளும், சிறப்பு ஆராதனைகளும் நடத்தப்பட உள்ளன. பூஜையின்போது, விநாயகருக்கு பிடித்த கொலுக்கட்டைகளையும், சுண்டல், பொரி, அவல் உள்ளிட்ட பண்டங்களை வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட உள்ளது.விநாயகர் சதுர்த்தி தினமான இன்று மாலை பெரியகுளத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அருகில் வராகநதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட உள்ளது.

நாளை தேனியில் அரண்மனைப்புதூர் முல்லையாற்றிலும், உத்தமபாளையத்தில் ஞானம்மாள் கோயில் அருகே உள்ள முல்லைப்பெரியாற்றிலும், கம்பத்தில் சுருளிப்பட்டி ரோட்டில் உள்ள முல்லைப்பெரியாற்றிலும், ஆண்டிபட்டியில் வைகை ஆற்றிலும், வருசநாட்டில் வைகையாற்றில் உள்ள மொட்டப்பாறை செக்டேம் பகுதியிலும், போடியில் புதூர் அருகே உள்ள கொட்டக்குடி ஆற்றிலும், நாளை மறுநாள் சின்னமனூரில் மார்க்கையன்கோட்டை முல்லைப்பெரியாற்று பாலம் அருகிலும், என 14 இடங்களில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட உள்ளது.விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி தேனி மாவட்டம் முழுவதும் மாவட்ட போலீஸ் எஸ்.பி சிவபிரசாத் தலைமையில் கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்.இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர்கள், சட்டம்&ஒழுங்கு போலீசார், ஆயுதப்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 900 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

The post விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் 863 இடங்களில் சிலைகள் இன்று பிரதிஷ்டை: எஸ்பி தலையில் பாதுகாப்பு பணியில் 900 போலீசார் appeared first on Dinakaran.

Related Stories: