கள்ளக்குறிச்சி, செப். 7: கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான் பகுதியில் விசிக மாநாடு நடக்கும் இடத்தை திருமாவளவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், சென்னை அசோக் நகர் பள்ளியில் நடைபெற்ற முற்போக்கு சொற்பொழிவு போன்ற சம்பவங்களை தொடர்ந்து தமிழ்நாடு அரசு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவதை தொடர்கதையாக வைத்துள்ளார். திமுக அரசுக்கும் மக்களுக்கும் இடையே முரண்பாட்டை உருவாக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருக்கிறது.
நல்லெண்ணத்தின் அடிப்படையில் பேசுவது போல அவர் காட்டிக் கொண்டாலும் உண்மை அதுவல்ல. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களின் நலனுக்காக கவலைப்படுபவரை போல பேசுவது உண்மையல்ல. திமுக அரசுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வருகிறார், அது ஏற்புடையது அல்ல. மேலும் விசிக சார்பில் கள்ளக்குறிச்சி மாநாட்டிற்கு கூட்டணி கட்சி தலைவர்களை அழைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். மாநாட்டை முன்னிட்டு மண்டல வாரியாக செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்படும். மாநாடு மகளிர் மட்டுமே பங்கேற்க கூடிய மாநாடாக அமையும், என்றார்.
The post முரண்பாடு உருவாக்குவதே ஆளுநரின் நோக்கம்: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.