3.63 லட்சம் மெட்ரிக் டன் அரிசி விநியோகம்: ரேஷன்கடை மூலம் மாதந்தோறும் 8, 9 தேதிகளில் நடக்கிறது

தஞ்சாவூர். ஆக.2: தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நெல் சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல்லின் இருப்பு மற்றும் தரம் குறித்து கொள்முதல் கிடங்கை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நேற்று ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் முன்னிலை வகித்தார். கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நெல் சேமிப்புகிடங்கு ஆய்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர், பொறுப்பேற்ற பிறகு ஒரு நெல் கூட திறந்தவெளி நேரடி கொள்முதல் நிலையத்தில் இருக்கக் கூடாது என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் 253 செயல்முறை கிடங்கு, 104 சேமிப்பு கிடங்கு, 18 சிமெண்ட் தளம் மற்றும் இரும்பு மேற்கூரையுடன் கூடிய கிடங்கு உட்பட 380 கிடங்கு 20.44 மெ.டன் சேமிப்பு செய்யும் வகையில் உள்ளது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் 9 வட்டத்தில் 8 சேமிப்பு கிடங்கு பிள்ளையார்பட்டியில் உள்ள சிமெண்ட் தளம் மற்றும் இரும்பு மேற்கூரையுடன் கூடிய கிடங்கு 50 எண்ணிக்கை 1000 மெ.டன் கொண்டது. 1.5 லட்சம் நெல் சேமிப்புக்கான வசதி உள்ளது. இதுபோல் 45 ஆலைகள் உள்ளது. நேரடி கொள்முதல் நிலையத்தின் செயல்பாடு எவ்வாறு உள்ளது எனவும், கூட்டுறவுத் துறை மூலமாக, 2021-22-ல் 10292 கோடி விவசாயிகளுக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. 2023-ல் 13942 கோடி 2023-2024-ல் 15542 கோடி 18.36 லட்சம் பேருக்கு. தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ஆண்டு கூட்டுறவுத்துறை மூலமாக ரூ.16,500 கோடி கடன் விவசாயிகளுக்கு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நியாய விலை கடைகளில் 36,954 கடைகள் உள்ளன. சுமார் 29,000 கடைகள் சொந்த கட்டடங்களாகவும், தனியார் கட்டடங்களில் 7997 கடைகள் செயல்பட்டு வருகிறது. இவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டுறவு துறையிடம் இணைந்து அனைத்து தனியார் கட்டடங்களில் செயல்பட்டு வரும் நியாயவிலை கடை அனைத்தையும் சொந்த கட்டடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 2009 புதிய நியாய விலை கடைகளும், 699 முழுநேர நியாய விலை கடைகளும், 1310 பகுதி நேர நியாய விலை கடைகளும் திறக்கப்பட்டது. மாதிரி பொது நியாய விலை கடைகளில் தரம் மற்றும் மேற்பார்வை சான்றிதழ் 9873 கடைகளுக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டை பொருத்தவரையில் மாதம் ஒன்றுக்கு 3.63 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுகிறது. 34,000 மெட்ரிக் டன் சர்க்கரையும், 8886 மெட்ரிக் டன் கோதுமையும், மற்றும் 1084 மெட்ரிக் டன் மண்ணென்ணையும் வழங்கப்படுகிறது என கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் முன்னிலையில் விவசாயிகள், மற்றும் அலுவலர்களுடன் நெல் கொள்முதல் தொடர்பாக கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விவசாய சங்க பிரதிநிகளின் கோரிக்கைகளை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி உத்கர்ஷ் குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மோகனா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் தமிழ் நங்கை, தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்தி, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் பிரபு, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் முத்து குமார், கிடங்கு பொறுப்பாளரும், தர கட்டுப்பாட்டு ஆய்வாளருமான சூரிய மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post 3.63 லட்சம் மெட்ரிக் டன் அரிசி விநியோகம்: ரேஷன்கடை மூலம் மாதந்தோறும் 8, 9 தேதிகளில் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: