ஆடி வெள்ளியை முன்னிட்டு பூக்கள் விற்பனை அமோகம்

தஞ்சாவூர், ஆக. 2: ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமை முன்னிட்டு தஞ்சையில் பூக்கள் ஒரு கிலோ மல்லி ரூ.400, முல்லை ரூ.500க்கு விற்பனையாகிறது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனை தரிசனம் செய்தால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். இன்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்கள் பூக்கள் வாங்கி சென்று அம்மனுக்கு சாற்றி வழிபாடுவர். பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இன்று ஆடி மாத 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இப்படி ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் பல்வேறு விழாக்கள் நடைபெறுவதால் பூக்கள் தேவை அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் மற்றும் பூக்காரத்தெரு பகுதிகளில் உள்ள பூச்சந்தைகளில் பூக்களின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. பூக்களின் விலையும் சிறிது உயர்ந்துள்ளது. அதன்படி மல்லிகைப்பூ விலை சற்று உயர்ந்து கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது. கனகாம்பரம் கிலோ ரூ.600-க்கு விற்பனையாகின. இதேபோல் முல்லை ரூ.500, செவ்வந்தி ரூ.200 வரை, பன்னீர் ரோஸ் ரூ.120, சம்பங்கி ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டன. இவற்றின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. இன்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் பூக்களின் தேவை அதிகம் என்பதால் விலை உயர்ந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ஆடி வெள்ளியை முன்னிட்டு பூக்கள் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Related Stories: