புதுக்கோட்டையில் ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் சாலைமறியல் போராட்டம்

புதுக்கோட்டை, ஆக.2: ஒன்றிய அரசு பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை முற்றிலுமாக புறக்கணித்த பாஜ அரசை கண்டித்து புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு கந்தர்வகோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை தலைமையில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 23ம் தேதி ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் பட்ஜெட் தாக்கல் செய்த நாள் முதல் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு கட்சியினர் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை மேலராஜ வீதியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கந்தர்வகோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சின்னதுரை தலைமையில் ஒன்றிய அரசு பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை முற்றிலுமாக புறக்கணித்த பாஜக அரசை கண்டித்தும், 100 நாள் வேலைத்திட்டத்திற்கு கடந்த ஆண்டு நிதியிலிருந்து ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காததையும், ரேஷன் கடைக்கான நிதி ஒதுக்கீட்டில் 30 சதவீதம் குறைப்பு, உரம் விதை உள்ளிட்ட விவசாயத்திற்கு ரூபாய் 21,000 கோடி நிதி குறைப்பு, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கான கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஒன்றிய அரசையும், பிரதமர் மோடியையும்,

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

The post புதுக்கோட்டையில் ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் சாலைமறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: