பாடாலூர், ஆக. 2: தமிழ்நாட்டில் அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் எளிதாக சென்று சேருவதற்காக தீட்டப்பட்ட திட்டம் மக்களுடன் முதல்வர் திட்டமாகும். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட கொளக்காநத்தம், அயினாபுரம், காரை, வரகுபாடி, சிறுகன்பூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. முகாமை ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்து, மக்களிடம் மனுக்களை பெற்றார். முகாமில், எரிசக்தி துறை, தமிழ்நாடு மின்சார வாரிய துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவு மற்றும் உணவுப்பாதுகாப்புத்துறை, வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, உள்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை,
சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, வேளாண் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நலத்துறை, மாவட்ட தொழில்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகிய 15 அரசுத்துறைகளில் வழங்கப்படும் 45 சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 864 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க அரசு அலுவலர்களுக்கு ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார். இதில் தாசில்தார்கள் சத்தியமூர்த்தி, பழனிச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், பிரேமலதா, ஊராட்சி மன்ற தலைவர்கள் ராகவன், பாலமுருகன், ராஜேஷ் மற்றும் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post கொளக்காநத்தத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 864 மனுக்கள் குவிந்தன appeared first on Dinakaran.