புதையுண்ட கிராமங்களில் மீட்பு பணி தீவிரம்; வயநாட்டில் நிலச்சரிவு பலி 300ஐ தாண்டியது: 300க்கும் மேற்பட்டோரை இன்னமும் காணவில்லை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டியது. மேலும் பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் அவர்களது உடல்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை மற்றும் முண்டக்கை கிராமங்களில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு நாட்டையே உலுக்கி இருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மட்டுமல்லாமல் 30 கிமீக்கு மேல் தொலைவில் உள்ள வனப்பகுதி மற்றும் ஆறுகளிலும் உடல்கள் கிடைத்து வருகின்றன. வயநாடு மாவட்டத்தின் மலையில் இருந்து உருவாகும் ஆறு 30 கிமீ தொலைவில் உள்ள மலப்புரம் மாவட்டம் சாலியாற்றில் கலக்கிறது. இந்த ஆற்றில் இருந்து மட்டும் 50க்கும் மேற்பட்ட உடல்களும், கை கால்கள் உள்பட உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. சாலியாற்றில் மேலும் உடல்கள் இருக்கலாம் என்று கருதப்படுவதால் அங்கும் உடல்களைத் தேடும் பணி நடந்தது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்த சுவடே தெரியாமல் ஆகிவிட்டது. அந்தப் பகுதிகளில் மிகப்பெரிய பாறைகளும், மரங்களும் குவிந்து கிடக்கின்றன. மேலும் 2 அடிக்குமேல் சகதியும் நிறைந்து காணப்படுகிறது. இந்த சகதிக்குள் பல உடல்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நேற்று முதல் நவீன கருவிகளை பயன்படுத்தி சகதிக்குள் சிக்கியுள்ள உடல்களை தேடும் பணி நடந்தது. நிலம்பூர் வனப்பகுதியிலும் கடந்த 2 தினங்களில் ஏராளமான உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்தன. அங்கும் மீட்புப் படையினர் உடல்களை தேடும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இதனால் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. 3 நாட்கள் தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் 300க்கும் அதிகமானோர் பேர் பலியானது உறுதிபடுத்தப்பட்டது.

300 பேரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. சூரல்மலையில் இருந்து முண்டக்கைக்கு செல்லும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மீட்பு பணிக்காக ராணுவத்தினர் தற்காலிக பெய்லி பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மழையையும் பொருட்படுத்தாமல் நேற்று முன்தினம் இரவு பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்தது. நேற்று மாலையில் பணி நிறைவடைந்து ராணுவ வாகனங்கள் சொதனை ஓட்டம் மேற்கொண்டன. தொடர்ந்து மீட்பு பணிக்கான வாகனங்கள் அந்த பாலம் வழியாக மறுபுறம் சென்றன.

கட்டிப்பிடித்தபடி 3 பேரின் சடலம்
நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்த முண்டக்கை பகுதியை சேர்ந்த நடன ஆசிரியையான ஜிதிகா பிரேம் நிலச்சரிவின் பயங்கரம் குறித்து கூறியது: நான், கணவர், குழந்தைகள் மற்றும் பெற்றோர் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது ஒன்றரை மணியளவில் பயங்கர சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். விபரீதமான சத்தத்தைக் கேட்டவுடன் ஏதோ ஆபத்து ஏற்படப்போகிறது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். உடனடியாக குழந்தைகள் உள்பட அனைவரையும் எழுப்பி போலீசுக்கு தகவல் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினோம். சிறிது நேரத்திலேயே வீட்டின் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. அடுத்தடுத்து இரண்டு முறை நிலச்சரிவு ஏற்பட்ட

பின்னர் யாருடைய சத்தமும் கேட்கவில்லை.
கீழே சென்றால் ஆபத்து இருக்கும் என்று உணர்ந்த நாங்கள் வருவது வரட்டும் என நினைத்து கும்மிருட்டில் மேல் நோக்கி சென்றோம். பின்னர் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு சென்று இரவு முழுக்க கொட்டும் மழையில் நின்று கொண்டிருந்தோம். காலையில் பார்த்தபோது நாங்கள் வசித்த பகுதி முழுவதும் தரைமட்டமாகி இருந்தது. எங்கள் கண்முன்னே பலர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். எங்களால் முடிந்தவரை சிலரை காப்பாற்றினோம். உடலில் ஒரு கம்பி துளைத்தபடி ஒருவரது உடல் கிடந்ததைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.

மண்ணுக்குள் உடல்கள் இருப்பது போல தோன்றியதால் என்னுடைய கணவர் தோண்டிப் பார்த்தபோது 3 பேர் கட்டிப்பிடித்த நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்கள் அனைவரும் என்னுடைய நெருங்கிய உறவினர்கள். என்னிடம் நடனம் படித்த குழந்தைகள் யாரும் இப்போது உயிருடன் இல்லை. ஒரு வழியாக நாங்கள் முகாமுக்கு வந்தடைந்தோம். அணிந்திருந்த ஆடைகளைத் தவிர மாற்று உடை கூட இல்லை. முகாமுக்கு வந்த பின்னர் தான் எங்களுக்கு உடைகள் கிடைத்தன. இவ்வாறு அவர் கூறினார்.

முண்டக்கை கிராமத்தில் பலி அதிகரிக்கும்
நிலச்சரிவில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிய முண்டக்கை கிராமத்தைச் சேர்ந்த அப்துல் காதர் கூறியது: என்னுடைய பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் வசிப்பவர்கள் குறித்து எனக்கு நன்றாகத் தெரியும். கடந்த சில நாட்களாக எங்களது பகுதியில் பலத்த மழை பெய்ததால் நிலச்சரிவு ஏற்படலாம் என்று மக்களிடையே ஒரு அச்சம் இருந்து வந்தது. முண்டக்கை பகுதியில் எந்த ஆபத்தும் ஏற்படாது என்றே நாங்கள் கருதினோம். இதுவரை எங்களது ஊரில் எந்த இயற்கை சீற்றமும் ஏற்படாதது தான் அந்த நம்பிக்கைக்கு காரணமாகும். எனவே எங்களது பகுதிக்கு அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் எங்கள் ஊரில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். எனவே நிலச்சரிவில் அவர்களும் கண்டிப்பாக சிக்கியிருக்கலாம். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை நாம் நினைப்பதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல், பிரியங்கா பார்வையிட்டனர்
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், வயநாடு தொகுதி முன்னாள் எம்பியுமான ராகுல் காந்தி, அவரது தங்கை பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று வயநாட்டிற்கு வந்தனர். அவர்களுடன் ஆலப்புழா தொகுதி காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபாலும் சென்றார். அனைவரும் நேராக பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதிக்கு சென்றனர். அங்கு ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்ட ராகுல்காந்தி, ராணுவ அதிகாரிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். ெதாடர்ந்து காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மேப்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களையும சந்தித்தார்.

உயிரோடு இருந்தவர்களை மீட்டு விட்டோம் இனி யாரும் உயிரோடு இல்லை: ராணுவம்
வயநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியது: இத்தனை நாள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் சிக்கித் தவித்த மக்களை காப்பாற்றும் பணிகள் நடந்தன. அந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. இனி அங்கு யாரும் உயிருடன் இல்லை என்று ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவில் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் ராணுவத்தினர் மிகச் சிறப்பாக சேவை செய்துள்ளனர். தற்போது நடந்துள்ளது கேரளா இதுவரை சந்திக்காத ஒரு பேரழிவாகும். எனவே இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்
நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து ஆலோசிக்க நேற்று வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், பாஜ, முஸ்லிம் லீக் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் வைத்து அரசு உயரதிகாரிகளுடனும் முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இதுவரை நடத்தப்பட்ட பணிகள் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஒரே நாளில் 42 பேர் பலி
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் மழைக்கு 42 பேர் பலியானார்கள். பீகாரில் 12, உத்தரகாண்ட்டில் 12, டெல்லியில் 10, இமாச்சலில் 5 , ராஜஸ்தானில் 3 பேர் உள்பட 42 பேர் பலியானார்கள்.

உடல்களைத் தேடும் பணியில் மோப்ப நாய்கள்
முண்டக்கை பகுதியில் பல அடி ஆழத்திற்கு சகதி நிறைந்து காணப்படுகிறது. இந்த சகதிக்குள் உடல்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் இதுவரை சகதியை தோண்டி பரிசோதிக்க முடியவில்லை. எனவே மோப்ப நாய்களை கொண்டு வந்து பரிசோதிக்க ராணுவம் தீர்மானித்தது. அதன் படி கண்ணூர் முகாமில் இருந்து ராணுவத்தின் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. இந்த நாய்களை பயன்படுத்தி சகதிக்குள் உடல்கள் உள்ளதா என்பதை ராணுவத்தினர் பரிசோதித்து வருகின்றனர்.

நிலச்சரிவுக்கு காரணம் என்ன?
கேரளா முழுவதும் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை மனிதர்கள் அழிப்பது தான் அடிக்கடி ஏற்படும் இந்த சீற்றத்திற்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இடுக்கி, வயநாடு உள்பட பகுதிகளில் உள்ள மலைகளில் கல் குவாரிகளை அமைத்ததும், அங்கு விடுதிகளை கட்டி மனிதர்கள் குடியேற்றியதும் தான் நிலச்சரிவுக்கு முக்கிய காரணமாகும். தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளில் உள் வனங்களிலும், மலைகளிலும் ஏராளமான சொகுசு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. வருடத்தின் எல்லா நாட்களிலும் இங்கு அருமையான சீசன் நிலவுவதால் வெளிநாடுகளில் இருந்தும் கூட ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். அரசுக்குத் தெரியாமல் ஏராளமான கட்டிடங்கள் இங்கு கட்டப்பட்டு வருகின்றன.

என் தந்தையை இழந்த போது ஏற்பட்ட வேதனையை இப்போது உணர்கிறேன்: ராகுல் காந்தி பேட்டி
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியது: வயநாட்டில் நடந்தது மிக மோசமான சம்பவம் ஆகும். இந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பரிதாபகரமான நிலை எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. என் தந்தையை இழந்தபோது எவ்வாறு எனக்கு வேதனை ஏற்பட்டதோ அதே வேதனையை இப்போது நான் உணர்கிறேன். குடும்பத்தில் உள்ள அனைவரையும் இழந்த பலரை நான் முகாமில் சந்தித்தேன். அவர்களுக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவது என தெரியவில்லை. என்னுடைய வாழ்க்கையில் இது மிகவும் கடினமான நாள் ஆகும். தந்தையை இழந்த பல குழந்தைகளை பார்த்தேன். அவர்களது வேதனை எனக்கு நன்றாகவே தெரியும். இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக நான் ஒன்றிய அரசை வலியுறுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post புதையுண்ட கிராமங்களில் மீட்பு பணி தீவிரம்; வயநாட்டில் நிலச்சரிவு பலி 300ஐ தாண்டியது: 300க்கும் மேற்பட்டோரை இன்னமும் காணவில்லை appeared first on Dinakaran.

Related Stories: