கடமலை மயிலை ஒன்றியத்தில் இலவம் பஞ்சு விலை கடும் சரிவு

வருசநாடு, ஜூலை 30: கடமலை-மயிலை ஒன்றியத்தில் இலவம் பஞ்சு விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் வருசநாடு, வாலிப்பாறை, காந்திகிராமம், கோம்பைத்தொழு உள்ளிட்ட கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இலவம் பஞ்சு சாகுபடி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக இலவம்காய் விளைச்சல் அதிகமாக இருந்தது. விலையும் கிலோ ரூ.110க்கு விற்பனையானது.

இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இந்தாண்டு போதிய மழை இல்லாததால் விளைச்சல் இல்லை. அதேசமயம் விலையும் இல்லை. இலவம் பஞ்சு கிலோ ரூ.66க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘மரங்களில் இருந்து இலவம் காய் பறிக்க 1000 ரூபாய் கூலியும், இலவம் பஞ்சுகளை தரம் பிரிப்பதற்கு நபருக்கு 350 கூலியும் கொடுக்க வேண்டியுள்ளது.

தற்போது விலை குறைந்துள்ளதால் வேலையாட்களுக்கு கூலி கொடுக்க கூட வருமானம் கிடைப்பதில்லை. இதனால் காய்களை பறிக்காமல் மரங்களிலேயே விட்டுள்ளோம். கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு இடைத்தரகர்களே காரணம். எனவே தமிழக அரசு இலவம் பஞ்சுக்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post கடமலை மயிலை ஒன்றியத்தில் இலவம் பஞ்சு விலை கடும் சரிவு appeared first on Dinakaran.

Related Stories: