சிறையில் இருக்கும் பாலியல் குற்ற கைதியிடம் இருந்து பாஜக முதல்வருக்கு கொலை மிரட்டல்: ஜெயில் சூப்பிரண்டு உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

ஜெய்ப்பூர்: சிறையில் இருக்கும் பாலியல் குற்ற கைதியிடம் இருந்து ராஜஸ்தான் பாஜக முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில், ஜெயில் சூப்பிரண்டு உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசியவர், ‘முதல்வர் பஜன் லால் சர்மாவை கொல்வேன்’ என்று மிரட்டல் விடுத்தார். இவ்விவகாரம் தொடர்பாக ஜெய்ப்பூர் டிஐஜி அனில் டாங்க் தலைமையிலான போலீசார், போனில் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘முதற்கட்ட விசாரணையில் ஷைலவாஸ் சிறையில் இருந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய நபர் சிறைக்கைதி என்பதும், குற்றம் சாட்டப்பட்ட நபர் குறித்த விபரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளது. டார்ஜிலிங்கை சேர்ந்த கைதி நிமோ என்பவர், முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அந்த கைதி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கைக்கு எப்படி செல்போன் வந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். ெதாடர்ந்து சிறை முழுவதும் சோதனையிட்டதில் 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறை கண்காணிப்பாளர் உட்பட 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’ என்றனர்.

 

The post சிறையில் இருக்கும் பாலியல் குற்ற கைதியிடம் இருந்து பாஜக முதல்வருக்கு கொலை மிரட்டல்: ஜெயில் சூப்பிரண்டு உட்பட 3 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: