பாலேகுளி ஏரியில் இருந்து 28 ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு

*விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பாலேகுளி ஏரியில் இருந்து, 28 ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் டிஆர்ஓ தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ்கலெக்டர் சரயு தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் முன்னிலை வகித்தார். கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட 217 மனுக்களில், 107 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசியதாவது:

விவசாயிகளுக்கு மானிய விலையில கதிரடிக்கும் கருவியை வழங்க வேண்டும். பாளேகுளி முதல் சந்தூர் வரை உள்ள 28 ஏரிகளுக்கு, அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிட வேண்டும். இக்கால்வாயை அகலப்படுத்த வேண்டும். சிங்காரப்பேட்டை பெரிய ஏரி வரை உபரிநீர் செல்லும் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். அனுமன்தீர்த்தம் கோயிலுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

வேப்பனஹள்ளி ஒன்றியம், சிகரலப்பள்ளியில் இருந்து எட்டப்பள்ளி ஏரி வரை உள்ள கால்வாயில் புதர்களை அகற்ற வேண்டும். மாவட்டத்தில் உள்ள அணைகளில் முதல்போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், நெற்பயிர் நடவு பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை, 1 மாதத்திற்கு நெல்நடவு பணிக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

வாணி ஒட்டு அணைக்கட்டு, எண்ணேகொள்புதூர் கால்வாய் திட்டம், ஆழியாளம் அணைக்கட்டு பகுதிகளில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. நில உரிமையாளர்கள் பட்டா மாற்றம் செய்யப்படாததால், நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, வருவாய்த்துறை சார்பில் பட்டா பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் நடத்த வேண்டும். கிருஷ்ணகிரி அணையில் இருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகிறது. ஆனால், வலது மற்றும் இடதுபுறக்கால்வாய்கள் வழியாக நீர்கடத்தும் திறன் 200 கனஅடியாக மட்டுமே உள்ளது.

எனவே, இக்கால்வாய்கள் விநாடிக்கு 400 கனஅடி நீர் செல்லும் வகையில் கால்வாயை உயர்த்தி அமைக்க வேண்டும். ஆடிப்பெருக்கு விழாவிற்காக, கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 3 நாட்களுக்கு முன்பே உபரிநீர் திறந்து விட வேண்டும். விவசாய நிலங்களுக்கு அரசு இலவசமாக சோலார் மின்வேலி அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதற்கு பதிலளித்து கலெக்டர் சரயு பேசியதாவது: ‘அணையில் இருந்து பாசனத்திற்காக பாளேகுளி ஏரி வரை தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. தற்போது, நெல்நடவு பணிகள் மேற்கொண்டுள்ளதால், 15 நாட்களுக்கு பிறகு பாளேகுளி ஏரியில் இருந்து, 28 ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். அதற்கு முன்னதாக, கால்வாய் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை, விவசாய பணிகளுக்கு பயன்படுத்துவது தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும். ஏரி, குளம், குட்டை, ஓடை உட்பட நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

நீர்ப்பாசன திட்ட பணிக்கு நிலம் கையகப்படுத்த நிலஉரிமையாளர்கள் பட்டா பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் நடத்தப்படும். யானைகள் வனத்தில் இருந்து வெளியேறுவதை தடுக்க, சோலார் மின் வேலி அமைக்கும் பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்’. இவ்வாறு பேசினார்.

விவசாயிகள் தர்ணா

கூட்டத்தில் விவசாயிகள் சிலர் பேசுகையில், ‘விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து பேசுவதற்காக மனு அளித்தாலும், அலுவலர்கள் சிலர் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக, ஒரு சில விவசாயிகளுக்கு மட்டுமே, ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து பேச அனுமதியளிப்பதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விவசாயிகள் அனைவருக்கும் தங்களது கோரிக்கைகள் குறித்து பேச வாய்ப்பு அளிக்கப்படும்,’ என்றார். இதையடுத்து தர்ணா போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டு, இருக்கைக்கு சென்றனர்.

The post பாலேகுளி ஏரியில் இருந்து 28 ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: