திருப்பாச்சேத்தி அருகே ஊரணியில் கண்டெடுக்கப்பட்டது பழங்காலத் தாழியா? உறை கிணறா? தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள கோரிக்கை

 

திருப்புவனம், ஜூலை 25: திருப்பாச்சேத்தி ஊரணியில் நூறு நாள் வேலையின்போது, பழங்கால உறை கிணற்றின் வாய்ப்பகுதி போல கண்டுபிடிக்கப்பட்டதால், அப்பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பாச்சேத்தியில் இருந்து படமாத்தூர் செல்லும் சாலையில், வடக்கு கண்மாய் கரையில் காராளருடைய அய்யனார் கோயில் உள்ளது. இதன் எதிரே ஒரு ஊருணி இருந்தது. காலப்போக்கில் இந்த ஊருணி ஆக்கிரமிப்பினால் விளைநிலமாக மாற்றப்பட்டது.

இந்நிலையில், வருவாய்த்துறை அலுவலர்கள் அய்யனார் கோயில் ஊருணியை சமீபத்தில் மீட்டனர். இதில், நூறு வேலை திட்டம் மூலம் தூர்வாரும் பணி நடந்து வருகின்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் நூறு நாள் தொழிலாளர்கள் ஊருணியில் தூர்வார தோண்டியபோது, உறை கிணற்றின் வாய்ப்பகுதி போன்றும், பெரிய தாழியின் வாய்ப் பகுதி போன்றும் தென்பட்டதால், தொழிலாளர்கள் தோண்டுவதை நிறுத்திவிட்டனர். முழுமையாக தோண்டினால்தான் உறை கிணறா? பெரிய தாழியா என்பது தெரிய வரும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஏற்கனவே, வடக்கு கண்மாயில் சில மாதங்களுக்கு முன் கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. இப்பகுதியில் கல்வெட்டுகள் வட்டச்சில்லுகள், சுடுமண் பொம்மைகளின் உடைந்த ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கணக்கிடக்கின்றன. இதனால், இப்பகுதியை தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும்
என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருப்பாச்சேத்தி அருகே ஊரணியில் கண்டெடுக்கப்பட்டது பழங்காலத் தாழியா? உறை கிணறா? தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: