மொரார்ஜி தேசாய் சாதனையை முறியடித்த நிர்மலா சீதாராமன் : 7வது முறையாக ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்!!

புதுடெல்லி: நாடாளுமன்ற 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவியேற்றது. இதையடுத்து இன்று 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். 3வது முறையாக பிரதமரான மோடி தலைமையிலான கூட்டணி அரசின் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும். நாடு சுதந்திரம் அடைந்து பிரதமராக நேரு பதவியேற்ற பின்பு முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் தாக்கல் செய்தார்.முன்னாள் பிரதமர்கள் நேரு, லால் பகதூர் சாஸ்திரி தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பதவி வகித்த போது மொரார்ஜி தேசாய் ஒட்டுமொத்தமாக 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்து, அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் மூத்த தலைவரான முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஒட்டுமொத்தமாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இவர் 2004 முதல் 2008 வரை தொடர்ச்சியாக 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

அதேபோல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 1991 முதல் 1995 வரையிலான காலகட்டத்தில் தொடர்ந்து 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் இரண்டாவது பதவிக் காலத்தில் நாட்டின் முழுநேர நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அப்போது தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பின்பு தொடர்ந்து 4 முழு பட்ஜெட்டையும், கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டையும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்தார். கடந்த 2020ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது 2 மணி நேரம் 40 நிமிஷங்களுக்கு நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். இதுவே பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் ஒருவர் நிகழ்த்திய உரைகளில் மிக நீளமானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து, நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

The post மொரார்ஜி தேசாய் சாதனையை முறியடித்த நிர்மலா சீதாராமன் : 7வது முறையாக ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்!! appeared first on Dinakaran.

Related Stories: