மணலி பிரதான சாலையில் மந்தகதியில் பாதாள சாக்கடை பணி: விரைந்து முடிக்க கோரிக்கை

 

திருவொற்றியூர், ஜூலை 22: மணலி மண்டலம், நெடுஞ்செழியன் சாலை சுற்று வட்டாரத்தில் உள்ள அரியலூர், கடப்பாக்கம், பெரியார் நகர் போன்ற 20க்கும் மேற்பட்ட பகுதி மக்களுக்கு பயன்படக்கூடிய பிரதான சாலையாகும். இந்த சாலை வழியாக குடிநீர் லாரி, கார், மோட்டார், பைக், பள்ளி, கல்லூரி வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் வாகன ஓட்டிகள் வசதிக்காக மாநகராட்சி சார்பில் தார் சாலை அமைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த சாலையில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெறுவதால், அந்த பணிகள் முடிந்தால்தான் சாலை போடும் பணியை தொடங்க முடியும் என்று கூறி அதிகாரிகள் சாலை போடுவதை நிறுத்தி வைத்துள்ளனர்.

3 மாதங்களுக்கு மேலாகியும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் மந்தகதியில் நடப்பதால் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் மாற்றுப்பாதையில் செல்கின்றன. எனவே, நெடுஞ்செழியன் சாலையில் உடனடியாக பாதாள சாக்கடை திட்ட பணியை முடிக்க வேண்டும், தொடர்ந்து சாலையும் போட வேண்டும் என்று கழிவுநீர் மற்றும் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுக்கும், மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கும் மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்கம் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் இந்த பழுதடைந்த சாலையில் பல இடங்களில் மழை நீர் தேங்கி சேறும், சகதியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதோடு, பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, விரைந்து சாலை அமைக்க வேண்டும்,’’ என்றனர்.

The post மணலி பிரதான சாலையில் மந்தகதியில் பாதாள சாக்கடை பணி: விரைந்து முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: