அரியலூர், ஜூலை 16:மிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று இந்திய கூட்டணி சார்பில் கர்நாடக காங்கிரஸ் அரசிடம் வலியுறுத்துகிறோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூரில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளி என்று சொல்லக்கூடிய நிலையில் என்கவுண்டர் நடந்துள்ளது. என்கவுண்டர் கூடாது என்பதும் எங்களது கருத்து.
தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று இந்திய கூட்டணி சார்பில் கர்நாடக காங்கிரஸ் அரசிடம் வலியுறுத்துகிறோம். இது மாநில உரிமை சம்பந்தப்பட்ட பிரச்னை மட்டுமல்ல. தமிழக அரசே அதை பார்த்து கொள்ளும் என வேடிக்கை பார்க்கக்கூடிய நிலையில் மத்திய அரசு இருக்க கூடாது. காவிரி ஒழுங்காற்று குழு என்ன ஆணையிட்டுள்ளதோ அந்த ஆணையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு கர்நாடக அரசிற்கு உள்ளது.
எனவே காவிரி பிரச்னை என்பது தமிழக அரசிற்கும், கர்நாடகா அரசுக்கும் இடையிலான மாநில பிரச்னையாக கருதி மத்திய அரசு அமைதி காக்க கூடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நீட் விலக்கு குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக இந்திய கூட்டணி கட்சி முதல்வர்கள் எல்லாருக்கும் கடிதம் எழுதி மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.