அரியானாவில் பகுஜன் சமாஜ் – லோக் தளம் மீண்டும் கூட்டணி

சண்டிகர்: அரியானாவில் சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் மற்றும் இந்திய தேசிய லோக் தளம் கட்சிகள் இரண்டும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு முடிவு செய்துள்ளன. அரியானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய தேசிய லோக் தளம் கட்சி மீண்டும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இந்திய தேசிய லோக் தளத்தின் தலைவர் அபய் சவுதாலா மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்த ஆகியோர் நயாகோனில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சவுதாலா, ‘‘மக்களின் உணர்வுகளை மனதில் கொண்டு கூட்டணி உருவாக்கப்பட்டது. அரியானாவில் வரும் சட்டமன்ற தேர்தலை கூட்டாக சந்திப்பதற்கு முடிவு செய்துள்ளோம். மாநிலத்தை சூறையாடும் பாஜவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு, 10 ஆண்டுகள் மாநிலத்தை கொள்ளையடித்த காங்கிரஸ் கட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்பதே சமானியர்களின் உணர்வாக உள்ளது. மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் 37 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும், மீதமுள்ளவற்றில் இந்திய தேசிய லோக் தளமும் போட்டியிடும்” என்றார்.

The post அரியானாவில் பகுஜன் சமாஜ் – லோக் தளம் மீண்டும் கூட்டணி appeared first on Dinakaran.

Related Stories: