திருமயத்தில் 28 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அம்மன்கோயில் கும்பாபிஷேகத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும்

திருமயம்,ஜூலை 8: திருமயத்தில் நடைபெறும் அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அப்பகுதி மக்கள், பக்தர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோயில் கும்பாபிஷேகம் 28 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் கோயில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளில் அறநிலையத்துறை அதிகாரிகளும் கோயில் நிர்வாகத்தினரும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கும்பாபிஷேக நாளன்று பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருமயம் பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் திருமயம் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதால் அப்பகுதியில் உள்ள அரசு, தனியார் நிறுவனங்களில் வழக்கமாக நடைபெறும் பணிகள் பாதிக்கக்கூடும். அதேசமயம் திருமயம் பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு அசோகரிகத்தை ஏற்படுத்தும் என பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர். எனவே திருமயம் இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக நாளன்று மாவட்ட நிர்வாகம் திருமயம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் அத்தியாசிய நிறுவனங்களை தவிர்த்து மற்ற அரசு, தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post திருமயத்தில் 28 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அம்மன்கோயில் கும்பாபிஷேகத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: