திண்டுக்கல். ஜூலை 8: திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளில், மாடுகள் சுற்றித்திரிந்தால் அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் கோசாலையில் சேர்க்கப்படும் அந்த மாடுகள் உரிமையாளர்களுக்கு திரும்ப கிடைக்காது என மாநகராட்சி தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திண்டுக்கல் மாநகரில் மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதால், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் கடும் இடையூறு ஏற்படுகிறது. மேலும் இதுபோல் சுற்றி வரும் மாடுகளால் வாகன விபத்துக்களும் தொடர்கிறது.
இதுகுறித்து மாடுகள் வளர்ப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பலருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாநகர எல்லைக்குள் மாடு வளர்ப்போர் அவற்றை தங்களுக்கு சொந்தமான இடங்களில் வைத்து முறையாக பராமரிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் மாடுகள் திறந்தவெளி மற்றும் சாலைகளில் சுற்றித்திரிந்தால், அவற்றின் உரிமையாளர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படும். அத்துடன் பறிமுதல் செய்யப்படும் மாடுகள், அருகில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும். அவை எக்காரணம் கொண்டும் உரிமையாளருக்கு திரும்ப வழங்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post திண்டுக்கல்லில் சாலைகளில் சுற்றும் மாடுகள் கோசாலையில் சேர்க்கப்படும்: திரும்ப கிடைக்காது என எச்சரிக்கை appeared first on Dinakaran.