நெல்லை: மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு நிலங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்து உள்ளார்.புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாஞ்சோலை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அங்கு வசிப்பிடம் கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் நான் நேரடியாக ஆஜராக உள்ளேன். பிபிடிசி நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிந்த பின்னர் தேயிலைத் தோட்டம் நேரடியாக அரசு கட்டுப்பாட்டில் வந்துவிடும். தேயிலை தோட்டங்களை அரசு கையகப்படுத்தி அங்கு வசிக்கும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம். தமிழகத்தின் செல்வங்கள் மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் என்பதை அரசு மறக்கக்கூடாது.
இந்தியாவில் அசாம், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநில மக்களுக்கு நிலம் பகிர்ந்தளிப்பு செய்ததை போல் மாஞ்சோலை தொழிலாளர்களுக்கும் நிலம் கொடுத்தால் பிரச்னை முடிந்து விடும். காரையாறு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஐந்து ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரை நிலம் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. மாஞ்சோலை விவகாரத்தில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் மனநிலையை உணர்ந்து கலெக்டர் நல்ல அறிக்கையை அரசுக்கு வழங்கினால் அரசு நல்ல நடவடிக்கையை எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு நிலங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும்: கிருஷ்ணசாமி கோரிக்கை appeared first on Dinakaran.