செல்போன் நிறுவனங்கள் கட்டண உயர்வு 109 கோடி பயனர்களுக்கு ரூ.35 ஆயிரம் கோடி சுமை: மோடி அரசின் அனுமதிக்கு காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: 3 முன்னணி செல்போன் நிறுவனங்கள் கட்டண உயர்வை அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக கட்டணங்களை உயர்த்த எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் பொது செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நேற்று கூறியதாவது: மோடி 3வது முறை பிரதமராக பதவியேற்றாலும்,தனியார் முதலாளிகளுக்கு சலுகை காட்டும் போக்கு தொடர்ந்து நீடிக்கிறது.ஜூலை 3 முதல், தனியார் செல்போன் நிறுவனங்களான, ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா, சராசரியாக 15 சதவீதம் தங்கள் கட்டணங்களை அதிகரித்துள்ளன. மூன்று தனியார் செல்போன் நிறுவனங்களின் சந்தைப் பங்கு 91.6 சதவீதம் அல்லது டிசம்பர் 31, 2023 நிலவரப்படி மொத்தம் 119 கோடி செல்போன் பயனர்களில் 109 கோடி செல்போன் பயனர்கள் உள்ளனர்.

செல்போன் நிறுவனங்களின் ஆதாயத்துக்கு அனுமதி அளித்ததன் மூலம் 109 கோடி செல்போன் பயனர்களை மோடி அரசு ஏமாற்றி வருகிறது. இணைப்பைக் கோரும் இந்தியாவின் சாமானிய ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து ஆண்டுக்கு கூடுதலாக ரூ.34,824 கோடி இவை சம்பாதிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வு அறிவித்துள்ள ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவன முதலீடு, வருமானம், சேவை அளவில் மாறுபாடு உள்ளது. ஆனால் கட்டண உயர்வை மட்டும் 3 நிறுவனங்களும் 15 % முதல் 20 % கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.

எந்த கட்டுப்பாடும் இன்றி 3 செல்போன் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒன்றிய அரசு அனுமதித்தது ஏன்? செல்போன் கட்டண உயர்வு விவகாரத்தில் மோடி அரசு தனது கடமையை செய்ய தவறிவிட்டது. ஒன்றிய அரசு கடமை தவறியதன் மூலம் செல்போன் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளது.நாட்டில் 92% செல்போன் சேவை தரும் 3 நிறுவனங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த அனுமதித்தது எப்படி?. ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் 48 மணி நேரத்துக்குள் ஒரே மாதிரியாக கட்டண உயர்வை அறிவித்தது எப்படி?. இவ்வாறு சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

* மோடியின் பழிவாங்கும் அரசியல்
காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், மோடி அரசின் பழிவாங்கும் செயலால் கர்நாடக மக்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி கிடைக்காமல் போனது. இதனால் உணவு மானியத்துக்கான செலவு பல ஆயிரம் கோடியாக அதிகரி்த்துள்ளது. பாஜ அல்லாத அரசுகள் தங்கள் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுப்பதையே பாஜ நோக்கமாக கொண்டுள்ளது. கடந்த 2023,ஜூன் 13, அன்று, மோடி அரசு திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (உள்நாட்டு) கீழ் மாநில அரசுகளுக்கு அரிசி விற்பனை செய்வதை நிறுத்தியது. இதனால், ஏழை மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ரூ.170 பணம் மாநில அரசு வழங்குகிறது என்றார்.

The post செல்போன் நிறுவனங்கள் கட்டண உயர்வு 109 கோடி பயனர்களுக்கு ரூ.35 ஆயிரம் கோடி சுமை: மோடி அரசின் அனுமதிக்கு காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: