உன்னாவ் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் ராகுலுடன் சந்திப்பு: குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு

புதுடெல்லி: உன்னாவ் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் அவரது தாயாரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த வழக்கில் குற்றவாளியான பாஜ முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அத்தொகுதி பாஜ எம்எல்ஏ குல்தீப் செங்கர் வேலை வாங்கித் தருவதாக அழைத்து கடந்த 2017ல் பாலியல் பலாத்காரம் செய்தார். அரசியல் செல்வாக்கால் செங்கர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்தனர்.

இதற்கிடையே, 2018ல் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீஸ் காவலில் மர்மான முறையில் உயிரிழந்தார். 2019ல் நடந்த சாலை விபத்தில் 2 உறவினர்கள் பலியான நிலையில், பாதிக்கப்பட்ட பெண் படுகாயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இதன் பின் செங்கர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. பலாத்கார வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மரண வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதனால் பாஜ கட்சியிலிருந்து செங்கர் நீக்கப்பட்டார்.

தனது தண்டனையை எதிர்த்து செங்கர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, நிபந்தனை ஜாமீன் வழங்கி நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதை கண்டித்து பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தாயாரும் டெல்லியில் இந்தியா கேட் முன்பாக நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாண்டி பகுதியில் அவர்கள் செய்தியாளர்களை சந்திக்க இருந்த நிலையில், சிஆர்பிஎப் வீரர்கள் அவர்களை பஸ்சில் அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரை சிஆர்பிஎப் வீரர்கள் தள்ளி விட முயன்றதால் ஓடும் பஸ்சில் இருந்து அவர் குதித்ததாக கூறி உள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தாயாரும் நேற்று டெல்லி ஜன்பாத் சாலையில் உள்ள சோனியா காந்தி வீட்டில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசினர். நேற்று முன்தினம் இரவு நடந்த சம்பவங்களையும் அவர்கள் ராகுலிடம் விளக்கி உள்ளனர். இதே போல பிரதமர் மோடியையும் நேரில் சந்தித்து முறையிட விரும்புவதாக பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க கூறி உள்ளார். மேலும், செங்கருக்கு ஜாமீன் வழங்கிய டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறி உள்ளார். செங்கருக்கு ஆயுள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டாலும், 10 ஆண்டு சிறை தண்டனை மீதான மேல்முறையீடு வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் குடும்பத்தின் மரணத்திற்கு சமம்
உன்னாவ் வழக்கில் செங்கருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் தங்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட மரணத்திற்கு சமம் என பாதிக்கப்பட்டவரின் தாய் கதறி அழுதுள்ளார்.

* ‘செயலிழந்த சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறோம்’
உன்னாவ் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்பட்டதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘கூட்டுப் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரை இப்படி நடத்துவது பொருத்தமானதா? நீதிக்காகக் குரல் எழுப்பும் துணிச்சல் இருப்பதுதான் அவருடைய குற்றமா? குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. குறிப்பாக பாதிக்கப்பட்டவர் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்பட்டு, பயத்தின் நிழலில் வாழும்போது இது நிகழ்ந்திருப்பது வெட்கக் கேடானது. பலாத்காரம் செய்தவருக்கு ஜாமீன், ஆனால் பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளைப் போல நடத்துவது – இது என்ன வகையான நீதி? நாம் செயலிழந்த பொருளாதாரமாக மட்டும் மாறவில்லை; இதுபோன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்களால், செயலிழந்த சமூகமாகவும் மாறிக்கொண்டிருக்கிறோம்’’ என கூறி உள்ளார்.

Related Stories: