முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ராஞ்சி: ஜார்கண்ட் மாநில முதல்வராக 3வது முறையாக பதவியேற்ற ஹேமந்த் சோரன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் 8ம் தேதி நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நிலம் வாங்கிய விவகாரத்தில், முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. அதையடுத்து அவர் கடந்த ஜனவரி 31ம் தேதி ராஜினாமா செய்தார். அன்றைய தினமே அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது கட்சியை சேர்ந்த அமைச்சராக இருந்த சம்பய் சோரன் முதல்வராக பதவியேற்றார். ஹேமந்த் சோரன் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டு 5 மாதங்கள் ஆன நிலையில், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 28ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, ஜாமீனில் வெளியே வந்த ஹேமந்த் சோரனை சட்டப்பேரவை கட்சி தலைவராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி எம்எல்ஏக்கள் மீண்டும் தேர்வு செய்தனர். இதனால், முதல்வர் பதவியை சம்பாய் சோரன் கடந்த 3ம் தேதி ராஜினாமா செய்தார்.

முதல்வராக பதவியேற்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் ஹேமந்த் சோரன் உரிமை கோரினார். அதன்படி தலைநகர் ராஞ்சியில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹேமந்த் சோரன் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. மாநிலத்தின் 13வது முதல்வராக பதவியேற்ற ஹேமந்த் சோரனுக்கு, ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான புதிய அரசு, வரும் 8ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடரின் போது நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள உள்ளது. ஜார்கண்டில் ஹேமந்த் சோரனின் ஜேஎம்எம் கட்சிக்கு 30 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 16 எம்எல்ஏக்கள், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த ஒரு எம்எல்ஏ என மொத்தம் 47 பேர் உள்ளனர். மொத்தமுள்ள 81 இடங்களுக்கு ெபரும்பான்மை பலத்திற்கு 41 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்ற ஹேமந்த் சோரனின் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.

 

The post முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை appeared first on Dinakaran.

Related Stories: