உ.பி.யில் 121 பேர் உயிரிழப்புக்கு காரணமான சாமியார் போலே பாபா: 5 நட்சத்திர ஆசிரமம்; ரூ.100 கோடி சொத்துகுவிக்கப்பட்டது அம்பலம்

உத்திரப் பிரதேசம்: உத்திரப் பிரதேசத்தில் 121 பேர் உயிரிழப்புக்கு காரணமான சாமியார் போலே பாபா குறுகிய காலத்தில் 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து குவித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது அம்பலமாகியது. உத்திரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் உரிய அனுமதியின்றி போதுமான ஏற்பாடுகள் செய்யாமல் சாமியார் போலே பாபா நடத்திய பிரசங்க கூட்டத்தில் பங்கேற்ற 121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து உத்திரபிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

இதையடுத்து தலைமறைவான போலே பாபா குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றனர். 1999ம் ஆண்டில் போலீஸ் வேலையை விட்டு சாமியாரான போலே 20 ஆண்டுகளுக்குள் 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களை குவித்துள்ளார். அரண்மனை பாணியில் ஆசரமத்தை போலே பாபா உருவாக்கி அங்கு 5 நட்சத்திர அந்தஸ்தில் சகல வசதிகளும் ஏற்படுத்தியுள்ளார். ஆசிரமத்தை சுற்றி பெருமளவிலான நிலத்தையும் அவர் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். கஸ்கஞ்ச், ஆக்ரா, கான்பூர், குவாலியர் உள்பட மொத்தம் 24 இடங்களில் ஆசிரமங்களை நடத்தும் போலே பாபா தனது அறக்கட்டளை பெயரில் அங்கெல்லாம் ஏராளமான நிலங்களையும் வாங்கி குவித்தது தெரியவந்தது.

விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆசை கொண்ட போலே பாபா சொகுசு காரில் பயணித்து வந்தார். இது தவிர மேலும் ஆடம்பர கார்களை வைத்துள்ளார். போலே பாபா தனது ஆசிரமத்தில் நன்கொடை பெறுவதில்லை என்று ஒரு பகுதியில் தகவல் பகிர்ந்து வந்துள்ளார். ஆனால் அங்கிருக்கும் சுவர்களில் எல்லாம் சிமெண்ட் மூட்டைகள் முதல் வாகனங்கள் வரை நன்கொடை அளித்தவர்கள் பெயர் விவரங்கள் பொறிக்கப்பட்டது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சாமியார் பெயரில் சொத்துக்களை குவித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த போலே பாபா பிடிபட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post உ.பி.யில் 121 பேர் உயிரிழப்புக்கு காரணமான சாமியார் போலே பாபா: 5 நட்சத்திர ஆசிரமம்; ரூ.100 கோடி சொத்துகுவிக்கப்பட்டது அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: