பாஜக மாஜி எம்எல்ஏவின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிரான மனு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை : பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிபிஐயிடம் நேரில் புகார் மனு

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார், தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவர் ஏற்கனவே 7 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டும், அவர் பொது ஊழியர் என்ற வரையறைக்குள் வருவாரா என்ற கேள்வியை எழுப்பியும், டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 23ம் தேதி அவரது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

ரூ.15 லட்சம் பிணையத் தொகை மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ‘சட்டத்திற்கு முரணானது’ மற்றும் ‘விபரீதமானது’ என்று கூறி சிபிஐ தரப்பில் கடந்த 26ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. செல்வாக்கு மிக்க நபரான செங்கார் வெளியே வந்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், சாட்சிகளுக்கும் ஆபத்து ஏற்படும் என சிபிஐ தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நாளை (டிச. 29) விசாரிக்க உள்ளது.

இதனிடையே, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்கள் குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட ‘மரண தண்டனை’ என பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை உயிரிழந்த வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை உள்ளதால் செங்கார் தொடர்ந்து சிறையிலேயே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரால் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தாயாரும் டெல்லியில் உள்ள சிபிஐ அதிகாரிகளை நேரில் சந்தித்து 6 பக்கங்கள் கொண்ட புகார் மனுவை அளித்தனர்.

அந்த மனுவில், ‘வழக்கின் விசாரணை அதிகாரி குற்றவாளியான குல்தீப் சிங் செங்காருடன் கூட்டுச் சேர்ந்து அவருக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார்’ என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், உண்மைகளை திரித்து கூறியது, பள்ளி ஆவணங்களை போலியாக தயாரித்து வயதை மாற்றியது, தான் கூறாத வாக்குமூலத்தை பதிவு செய்தது மற்றும் நீதிபதியுடன் கூட்டுச் சேர்ந்தது என அடுக்கடுக்கான புகார்களை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் கைது
குற்றவாளி செங்கார் சிறையில் இருந்து வெளியே வருவதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் கடந்த ஒரு வாரமாக டெல்லியின் இந்தியா கேட் மற்றும் நீதிமன்ற வளாகத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை நாடாளுமன்ற வளாகம் அருகே பெண்கள் உரிமை ஆர்வலர் யோகிதா பயானா மற்றும் காங்கிரஸ் தலைவர் மும்தாஜ் படேல் தலைமையில் ஏராளமான பெண்கள் திரண்டனர்.

‘பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதை நிறுத்துங்கள்’ என்ற முழக்கங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றம் அருகே போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று ஒலிபெருக்கி மூலம் டெல்லி போலீசார் எச்சரித்தனர். இருப்பினும், நீதி கேட்டு பெண்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால், பாதுகாப்புப் படையினர் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். பின்னர் மும்தாஜ் படேல், யோகிதா பயானா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் பெண் ஆர்வலர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

Related Stories: