நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் போலீஸ் காவலில் இருந்த ரவுடி சுட்டுக் கொலை: 2 பேர் கைது; 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்

ரிஷிகேஷ்: உத்தரகாண்ட் மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்ம கும்பலால் சுடப்பட்ட பிரபல ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை, கொள்ளை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் என 60க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய உத்தரகாண்ட மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி வினய் தியாகி, கடந்த 24ம் தேதி ரூர்க்கி சிறையிலிருந்து லக்சர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஹரித்வார் அருகே லக்சர் மேம்பாலத்தில் கரும்பு ஏற்றிச் சென்ற வண்டி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு பைக்கில் வந்த முகமூடி அணிந்த இரண்டு பேர், போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு வினய் தியாகியை குறிவைத்து சரமாரியாக சுட்டனர்.

இந்த திடீர் தாக்குதலில் இரண்டு காவலர்கள் காயமடைந்த நிலையில், மார்பு மற்றும் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிய வினய் தியாகி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த வினய் தியாகி, நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சன்னி யாதவ் மற்றும் அஜய் சைனி ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்விரோதம் காரணமாக பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதுகாப்பில் கோட்டை விட்டதாக 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, ‘போலீசாரின் உடந்தையுடன் இந்த கொலை நடந்துள்ளது’ என குற்றம் சாட்டியுள்ள வினய் தியாகியின் குடும்பத்தினர், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: