திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் வார விடுமுறையையொட்டி, முருகனை வழிபட திரளான பக்தர்கள் கூட்டம் கூடியது. முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோயிலில், வாரவிடுமுறை நாள் மற்றும் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் மலைக் கோயிலில் குவிந்தனர்.
இதனால், மலைப்பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நிறுத்த இடவசதியின்றி வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். காலை முதல் மாலை வரை தொடர்ந்து மாட வீதியில் குவிந்த பக்தர்கள் பொது வரிசையில் சுமார் 3 மணி நேரம் ரூ.100 கட்டண வழியில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
முன்னதாக, அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருக்கோயிலில் மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருவதால், இட நெருக்கடியால் வாகன ஓட்டிகள், பக்தர்கள் அன்னதான கூடம் நெருக்கடியால் சிரமம் அடைந்தனர்.
