கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா?

புதுக்கோட்டை,ஜூலை 4: கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்று நோயாளிகளிடம் கலெக்டர் மெர்சி ரம்யா கேட்டறிந்தார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக அரசு ஏழை, எளிய பொதுமக்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டு எண்ணற்ற பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், எம்.தெற்குதெரு ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், நடைபெற்று வரும் பணிகள், மழையூர் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.16.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் கட்டுமான பணி மற்றும் களபம் ஊராட்சியில் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம் (2021-22) திட்டத்தின் கீழ் டிராகன் பழ சாகுபடி பரப்பு விரிவாக்கப் பணிகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து முள்ளங்குறிச்சி ஊராட்சி, அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கற்றல், கற்பித்தல் திறன்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும் இப்பள்ளியில், சுற்றுச்சுவர், குடிநீர் வசதிகள், கழிவறை வசதிகள், விளையாட்டு திடல் உள்ளிட்டவைகள் குறித்தும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளிடம் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வுகளின் போது நடைபெறும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், மேலும் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை சுகாதார முறையில் பராமரித்திடவும், தேவையான பணியாளர்களை பணியமர்த்திடவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் மெர்சி ரம்யா, அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) பரமசிவம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம், அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துராமன், தமிழ்செல்வம், பேரூராட்சித் தலைவர் முருகேசன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

The post கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? appeared first on Dinakaran.

Related Stories: