திருவாரூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

திருவாரூர், டிச. 17: திருவாரூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழியினை கலெக்டர் மோகனசந்திரன் மற்றும் எம்.எல்.ஏ. பூண்டிகலைவாணன் ஏற்றுகொண்டனர். திருவாருர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் திருவாரூரில் தனியார் ஓட்டலில் கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் முன்னிலை வகித்தார். இதில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழியினை கலெக்டர் மோகனசந்திரன் மற்றும் எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் ஏற்றுகொண்டனர்.

பின்னர் கலெக்டர் மோகனசந்திரன் கூறுகையில், மாவட்டத்தில் எச்ஐவி தொற்றுகள் இல்லாத மாவட்டமாகவும், எய்ட்ஸ் நோய் உள்ளவர்களை புறக்கணித்தல் இல்லாமல் இந்த நோய் தொடர்பான இறப்புகள் இல்லாத நிலையை உருவாக்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்காமல் பாதுகாப்புடன் உள்ளார்கள் என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களின் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி உதவித்தொகை, மருத்துவ சிகிச்சை போன்ற உதவிகளும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நோய் தொற்று ஏற்பட்டவர்கள் சிகிச்சைபெற சென்று வருவதற்கும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் புதிய நோயாளிகள் உருவாகாமல் தடுக்க இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் நிலையில் அதற்கேற்ப பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். வாகனங்களில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சியிலும் கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்.பி அருட்செல்வன், மருத்துவகல்லூரி டீன் அசோகன், நகராட்சி தலைவர் புவனப்பிரியாசெந்தில், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் ஜெனிபர், மாவட்ட மேற்பார்வையாளர் ராமஜெயம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: