வங்கிகளில் உரிமைகோரப்படாத காப்பீட்டு, பங்குத் தொகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் முகாம்

பெரம்பலூர்,டிச.17: பெரம்பலூர் மாவட்டத்தில் வங்கிகளில் நீண்ட காலமாக உரிமைகோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டுத் தொகைகள் மற்றும் பங்குத் தொகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் முகாம் நாளை(18ஆம்தேதி) நடைபெற உள்ளது. மாவட்டக் கலெக்டர் மிருணாளினி தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :
பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நாளை 18ம் தேதி காலை 10.30 மணிக்கு நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத்தொகைகள், காப்பீட்டுத் தொகைகள் மற்றும் பங்குத் தொகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் முகாம் நடைபெற உள்ளது.இந்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் இந்த முகாம் கடந்த அக்-01ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை அனைத்து வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் மற்றும் பிற நிதித்துறை கிளைகளிலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாமின் முக்கிய நோக்கம், நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கிக் கணக்குகள் நிலுவையில் உள்ள வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்குகள் மற்றும் பிற நிதி சொத்துக்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உரிமையாளர்கள் அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் தங்கள் உரிமை கோரப்படாத நிதிச் சொத்துக்களை மீட்டெடுக்க உதவுவதும் ஆகும். வங்கிக் கணக்குகள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருந்தாலோ அல்லது உரிமை கோரப்படாத வைப்புத் தொகைகளாக இருந்தாலோ அவை ரிசர்வ் வங்கியின் வைப்புத் தொகை யாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்படும்.

பொதுமக்கள் தங்கள் வங்கி வலைத்தளங்கள் அல்லது ரிசர்வ் வங்கியின் (< https://udgam.rbi.org.in/ >) மூலம் இதை சரி பார்க்கலாம். உரிமையாளர்கள் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகள் இந்த தொகைகளை எந்த நேரத்திலும் முறையான ஆவணங்களுடன் வங்கியினை அணுகி ஆதாரங்கள் சமர்பித்து பெற்று கொள்ளலாம். வங்கித்துறை, காப்பீட்டுத்துறை மற்றும் நிதி தொடர்பான துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த முகாமில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்குவார்கள். பொதுமக்கள் தங்கள் அடையாள ஆவணங்கள் மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் முகாமில் பங்கேற்று இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தங்களின் கோரப்படாத நிதி தொகையை மீட்டெடுக்கலாம் என மாவட்டக் கலெக்டர் மிருணாளினி வெளியிட்டுள்ள அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: