கரும்பு விவசாயி மீது தாக்குதல்; அரசு சர்க்கரை ஆலை ஊழியர்களை கைது செய்ய வலியுறுத்தல்

ஜெயங்கொண்டம், டிச.17: ஆண்டிமடம் அருகே கரும்பு விவசாயியை தாக்கிய எம்.ஆர்.கே அரசு சர்க்கரை ஆலை ஊழியர்களை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தை விவசாயிகள் முற்றியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது கரும்பு அறுவடை நடைபெற்று பெண்ணாடம் தனியார் சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் உள்ள எம்.ஆர்.கே அரசு சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஆண்டிமடம் பகுதி விவசாயிகளிடம் பெண்ணாடத்தில் கொள்முதல் செய்யக்கூடாது எங்களிடம்தான் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு உடன்படாத ஆண்டிமடம் கரும்பு விவசாயிகள் தங்களிடம் கொள்முதல் செய்தால் தாமதமாக பணம் கிடைப்பதாகவும், சலுகைகள் குறைவாக இருப்பதாகவும் கூறி தங்களிடம் கொள்முதல் செய்ய மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதில் அதிருப்தி அடைந்த எம் ஆர் கே அரசு சக்கரை ஆலை ஊழியர்கள் நேரு, குமார் உள்ளிட்ட சிலர் கரும்பு ஏற்றி சென்ற விவசாயி வேல்முருகன் என்பவரின் டிராக்டரை மறித்து தாக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விவசாயி வேல்முருகனை தாக்கிய எம் ஆர் கே சர்க்கரை ஆலை ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்து ஆண்டிமடம் காவல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு அளிக்க வந்தனர். அப்போது அங்கு வந்த எம் ஆர் கே சர்க்கரை ஆலை ஊழியர்களின் வாகனத்தை மறித்து விவசாயியை தாக்கிய அரசு ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories: