குடிநீர் தொட்டிகள், மின்விளக்குகளை சேதப்படுத்துகின்றன மருங்கூரில் குரங்குகள் அட்டகாசம்

அஞ்சுகிராமம், ஜூலை 3: மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்டது அமராவதிவிளை. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த ஊருக்குள் அருகிலுள்ள மலை பகுதியில் இருந்து ஏராளமான குரங்குகள் வந்து வீடுகளிலும் பொது இடங்களிலும் பல்வேறு அட்டகாசங்கள் செய்து வருகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் தென்னை மரங்களில் ஏறி இளநீர் மற்றும் தேங்காயை பறித்து தண்ணீரை குடித்து விட்டு கீழே வீசுவது, மா மரம், பலா, கொய்யா உள்ளிட்ட மரங்களில் ஏறி காய்களை பறித்து வீசுவது, கிளைகளை முறித்து எறிவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் வீடுகளில் வெளியில் இருக்கும் டியூப்லைட், பல்புகளை பிடுங்கி உடைத்து எறிவது, வீட்டின் மேற்பகுதியில் உள்ள குடிநீர் சின்டெக்ஸ் டேங்கை சேதப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வகையான அட்டகாசங்களை செய்து வருகிறது. இதைக் கண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். இந்தக் குரங்குகளின் அட்டகாசம் குறித்து இந்தப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கூறும் போது குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை எடுத்து வீசியும் சேதப்படுத்தியும் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு எங்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுத்து வருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து கூண்டு வைத்து இந்த குரங்குகளை பிடித்து காட்டில் விட வேண்டுகிறோம் என்று அவர் கூறினார்.

The post குடிநீர் தொட்டிகள், மின்விளக்குகளை சேதப்படுத்துகின்றன மருங்கூரில் குரங்குகள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Related Stories: