மஞ்சள் நிறமாக மாறியது எண்ணூர் முகத்துவாரம்: மீனவர்கள் அதிர்ச்சி

சென்னை: எண்ணூரில் 2வது முறையாக கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறத்தில் மாறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எண்ணூரில் கொசஸ்தலை ஆறும், கடலும் கலக்கும் முகத்துவார பகுதியில் மீனவர்கள் மீன், இறால், நண்டு ஆகியவற்றை பிடித்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2023 அக்டோபர் மாதம் கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறத்தில் மாறியது.

அதேபோல், நேற்று மீண்டும் கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறமாக மாறியதைக் கண்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆற்றை சுற்றி இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் ரசாயனம் கலப்பதால்தான் மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது. இதனால், ஆற்றில் இருக்கும் மீன்கள் மற்றும் இறால்கள் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர். மேலும், கொசஸ்தலை ஆற்றை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

ஆற்றை சுற்றி இருக்கக்கூடிய தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து இதுபோல மீண்டும் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த ஆண்டு கொசஸ்தலை ஆற்றில் பெருமழை வெள்ளத்தில் கலந்து வந்த கச்சா எண்ணெய் கழிவுகளால் முகத்துவார ஆறு மாசு அடைந்தது குறிப்பிடத்தக்கது.

The post மஞ்சள் நிறமாக மாறியது எண்ணூர் முகத்துவாரம்: மீனவர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: