மருத்துவகல்லூரி பெண் பணியாளர்களை பேருந்தில் ஏற்றாமல் அவமரியாதையாக பேசிய நடத்துனர் பணியிட மாற்றம்

தஞ்சை: தஞ்சையில் மருத்துவகல்லூரி பெண் பணியாளர்களை அரசு டவுன் பஸ்சில் ஏற்றாமல் அவமரியாதையாக பேசியதாக நடத்துனரை பணியிட மாற்றம் செய்து போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், ஊழியர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் செவிலியர்கள், தூய்மை பணியாளர்களில் பெரும்பாலானோர் தஞ்சை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்கள் பணிக்காக தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரி வழியாக செல்லும் அரசு டவுன் பஸ்களில் சென்று வருகின்றனர்.

தினமும் ஷிப்ட் முறையில் பணிபுரியும் இவர்கள் வேலை நேரத்திற்கு ஏற்றவாறு பழைய பஸ் நிலையத்தில் இருந்து செல்கின்றனர். அதன்படி இன்று காலை நேர பணிக்காக 6.30 மணிக்கு பழைய பஸ் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் அரசு டவுன் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது மருத்துவ கல்லூரி செல்லும் டவுன் பஸ் வந்தது. அதில் ஏற அவர்கள் முயன்றனர்.

ஆனால் கண்டக்டர் இந்த பஸ் எடுக்க நேரமாகும். அடுத்த பஸ்சில ஏறுங்கள் என கூறினார். இதனால் அவர்கள் அடுத்து வந்த டவுன் பஸ்சில் ஏற முயன்றபோது அந்த கண்டக்டரும் இந்த பஸ்சில் ஏறாதீர்கள் என கூறி அலைக்கழித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் பஸ்களை எடுக்க விடாமல் பஸ் நிலைய நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் வெளியே செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.
இதனால் பஸ் நிலையத்தில் பல பஸ்கள் அங்கேயே நின்றது. மற்ற பயணிகளும் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்ல முடியாமல் இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கரந்தை போக்குவரத்து கிளை மேலாளர் சந்தானராஜ், மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பெண்கள், அரசு டவுன் பஸ்சில் இலவச பயணம் என்பதால் எங்களை போன்ற பெண்களை ஏற்ற மறுக்கின்றனர். பஸ்சில் ஏறினாலும் இந்த பஸ் எடுக்க நேரமாகும். அடுத்த பஸ்சில் ஏறுங்கள் என மாறி மாறி கூறுகின்றனர். இலவச டிக்கெட் என்பதால் சில கண்டக்டர்கள் பெண்களை ஏற்றாமல் அவமதிக்கின்றனர். அரசே இலவச டிக்கெட் என கூறும்போது கண்டர்கள் அவமரியாதையாக நடந்து கொள்வதை ஏற்று கொள்ள முடியாது.

நாங்கள் 7 மணிக்குள் மருத்துவ கல்லூரிக்கு சென்றால் தான் இரவு பணியில் ஈடுபட்டவர்களை மாற்றி விட முடியும். பஸ்களில் ஏற்ற மறுப்பது பல நாட்களாக நடக்கிறது. இலவச டிக்கெட் என்பதற்காக தான் அவமதிக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை பஸ்களை எடுக்க விட மாட்டோம் என திட்டவட்டமாக கூறினர்.

இதையடுத்து போக்குவரத்து மேலோளர் சந்தானராஜ், இனி இதுபோல் பிரச்சினை நடக்காமல் பார்த்து கொள்கிறோம். மறியலை கைவிடுங்கள். மாற்று பஸ்சில் உங்களை அனுப்பி வைக்கிறோம் என்றார்.
இதனை ஏற்றுக்கொண்டு பெண் பணியாளர்கள் மறியலை கைவிட்டனர்.

மாற்று பஸ் வரவைழக்கப்பட்டு அதில் ஏறி மருத்துவ கல்லூரிக்கு சென்றனர். மேலும் ஆம்புலன்சிலும் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த மறியல் போராட்டம் சுமார் 1.30 மணி நேரம் நடந்ததால் அதுவரை மற்ற பஸ்களும் செல்ல முடியாமல் நின்றது. மறியலை கைவிட்ட பிறகு மற்ற பஸ்களும் சென்றன. மேலும் அந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அரசு டவுன் பஸ்ஸில் ஏற்றாமல் அவ மரியாதையாக பேசியதற்காக அரசு டவுன் பஸ் கண்டக்டர் யேசுதாஸ், டைம் கீப்பர் ராஜா ஆகிய 2 பேரும் பணியிடம் மாற்றம் செய்து போக்குவரத்து துறை அதிகாரி உத்தரவிட்டார்.

The post மருத்துவகல்லூரி பெண் பணியாளர்களை பேருந்தில் ஏற்றாமல் அவமரியாதையாக பேசிய நடத்துனர் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: