ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு வலுத்திருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதுமாக வழக்கறிஞர்கள் 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷியா அதினியம் என்ற இந்த 3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். புதிய குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்திய ஒன்றிய அரசை கண்டித்து மதுரையில் உயர்நீதிமன்ற கிளை வாயில் முன்பு திரண்ட வழக்கறிஞர்கள் முழக்கமிட்டனர்.

மதுரை திருமங்கலம் நீதிமன்ற வளாகம் முன்பு திரண்ட 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 3புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலையில் அனைத்து மாநில முதலமைச்சர்களையும் சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ள தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த போவதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

நாகப்பட்டினத்தில் வழக்கறிஞர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு இருந்ததால் 4வது நாளாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்களின் போராட்டம் நடைபெற்றது. இந்திய குற்றவியல் சட்டங்களுக்கு இந்தி மற்றும் சமஸ்கிரதத்தில் பெயர் சூட்டியதை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரிய வழக்கில் வருகின்ற 23 தேதிக்குள் பதில் அளிக்க ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: