விஏஓ அலுவலகம் முன் தீக்குளித்த விவசாயி கலசபாக்கம் அருகே பரபரப்பு பட்டா மாற்றத்துக்கு அலைக்கழிப்பதாக

கலசபாக்கம், ஜூலை 2: கலசபாக்கம் அருகே நிலத்தின் பட்டா மாற்றம் மற்றும் அடங்கல் சான்றிதழ் வழங்க அலைக்கழிப்பதாக கூறி, விஏஓ அலுவலகம் முன் விவசாயி தீக்குளித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த கல்லரப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(33), விவசாயி. இவருக்கு துரிஞ்சாபுரம் ஒன்றியம், ஊதிரம்பூண்டி கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் மற்றும் அடங்கல் சான்றிதழ் கேட்டு தேவனாம்பட்டு விஏஓ அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். தொடர்ந்து, கடந்த 10 நாட்களாக விஏஓ அலுவலகம் சென்று சான்றிதழ் குறித்து கேட்டு வந்துள்ளார். ஆனால், கூட்டு பட்டா என்பதால் அடங்கல் வழங்குவதில் விஏஓ காந்தி என்பவர் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மீண்டும் விஏஓ அலுவலகம் சென்ற விவசாயி ராமகிருஷ்ணன், பட்டா மாற்றம் மற்றும் அடங்கல் சான்றிதழ் குறித்து கேட்டுள்ளார். ஆனால், நேற்றும் சான்றிதழ் கிடைக்காததால் மனவேதனையடைந்த அவர் திடீரென விஏஓ அலுவலகம் முன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் அவரை காப்பாற்றி, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விஏஓ அலுவலகம் முன் தீக்குளித்த விவசாயி கலசபாக்கம் அருகே பரபரப்பு பட்டா மாற்றத்துக்கு அலைக்கழிப்பதாக appeared first on Dinakaran.

Related Stories: