குறைபிரசவத்தில் பிறந்த 936 குழந்தைகள் கண்காணிப்பு மாவட்ட சுகாதார அலுவலர் தகவல் செய்யாறு சுகாதார மாவட்டத்தில்

செய்யாறு, டிச.19: செய்யாறு சுகாதார மாவட்டத்தில் குறைபிரசவத்தில் பிறந்த 963 பச்சிளம்குழந்தைகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார அலுவலர் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்யாறு மாவட்ட சுகாதார அலுவலர் சதிஷ்குமார் கூறியதாவது: திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவின்பேரில், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் பச்சிளம்குழந்தை நலனை மேம்படுத்தும் வகையில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் வரை செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 6,735 குழந்தைகள் பிறந்துள்ளது. இவற்றில் 963 குழந்தைகள் குறைபிரசவம் மற்றும் குறைந்த எடையில் பிறந்துள்ளது. இந்த குழந்தைகளுக்கு பள்ளி சிறார் நலத்திட்ட மருத்துவர்கள் மூலம் வீடுவீடாக சென்று தொடர் மருத்துவ கண்காணிப்பு வழங்கப்படுகிறது.

வட்டார அளவில் வட்டார மருத்துவ அலுவலர்கள் மேற்பார்வையிலும், மாவட்ட அளவில் மாவட்ட பயிற்சிக்குழு மருத்துவ அலுவலரின் வழிகாட்டுதல்படியும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. குறைந்த எடை பிரசவம் தடுக்க கர்ப்பிணிகளுக்கு சேவைகள் அதிகரிக்கப்பட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி, கர்ப்ப காலத்தில் காலமுறை பரிசோதனைகள், இரும்புச்சத்து மாத்திரைகள், கால்சியம் போன்ற ஊட்டச்சத்து மருந்துகள், சத்தான உணவு, ஓய்வு, ஆபத்து அறிகுறிகள் குறித்த விளக்கங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை நிலையங்கள் மூலம் வழங்கப்படுகிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, குழந்தை பிறந்தது முதல் 12 மாதங்கள் வரை மாதம் ஒருமுறை வீடுகளுக்கு நேரடியாக சென்று பரிசோதனை மேற்கொள்வதுடன், தாய்மை பராமரிப்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: